உலகக் கோப்பை வில்வித்தை: வெண்கலம் வென்று ஜோதி சுரேகா சாதனை

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் 8-வது சீசன் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனி நபர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னாம், அமெரிக்காவின் அலெக்ஸிஸ் ரூயிஸுடன் மோதினார். இதில் ஜோதி சுரேகா 143-140 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை எதிர்கொண்டார் ஜோதி சுரேகா. இதில் ஜோதி சுரேகா 143-145 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜோதி சுரேகா, உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கிரேட் பிரிட்டனின் எலா கிப்சனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் ஜோதி சுரேகா 150-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலகக் கோப்பை வில்வித்தை இறுதி தொடரில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஜோதி சுரேகா படைத்துள்ளார்.