பெண்களுக்கு முகத்தில் முடி வளர காரணம் என்ன? எந்த டயட் பின்பற்ற வேண்டும்? மருத்துவர் பரிந்துரை!

பெண்களுக்கு முகத்தில் முடி வளர காரணம் என்ன? எந்த டயட் பின்பற்ற வேண்டும்? மருத்துவர் பரிந்துரை!

பெண்களின் முகத்தில் இயல்புக்கு மாறாக முடி வளர்வது உடல்நல அபாயத்தைக் குறிக்கிறது. சில பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறாக ஆண்களை போல் முடி வளர்ந்திருப்பதை பார்த்திருப்போம். சிலர் இதனை கண்டுக்கொள்ளாமல் கடந்து வந்தாலும், பலரும் இதனை கேலி செய்வார்கள். ஏன், கடந்த சில மாதங்களுக்கு முன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்தனை.

ஆனால், சிலர் அந்த பெண்ணின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து, அந்த பெண்ணின் முகத்தில் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்திருப்பதை கேலி, கிண்டல் செய்தனர். உங்களுக்கும் இந்த சம்பவம் நினைவிருக்கும்? இல்லையா? ஆண்களை போல பெண்கள் யாரும் ஆசைப் பட்டு முகத்தில் முடி வளர்ப்பது இல்லை.

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால் ஏற்படுகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், பெண்கள் முகத்தில் முடி வளருவது ஏன்? இதற்கு பின்னால் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஹிர்சுட்டிசம்: பொதுவாக ஹிர்சுட்டிசம் (Hirsutism) என்பது உடலின் சில பகுதிகளில் முடி அதிகமாக இல்லாத அல்லது குறைவாக இருப்பதைக் குறிப்பதாகும். அவ்வாறே பெண்களுக்கு முகத்தில் தோன்றும் அதிகமான முடி வளர்ச்சியானது ஹிர்சுட்டிசம் என்றழைக்கப்படுகிறது.

இந்த பிரச்சனை சுமார் 5 முதல் 11 சதவீத பெண்களை பாதிப்பதாக Hirsutism, Normal Androgens and Diagnosis of PCOS என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. கருப்பை அல்லது அட்ரீனலைக் குறிக்கக் கூடிய ஹைபராண்ட்ரோஜெனிசம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறது ஆய்வு.

இளம் பெண்களில் அதிகம் காணப்படும் இந்த பிரச்சனை ஒரு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. பொதுவாக, பெண்களின் உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் இந்த பிரச்சனை ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

PCOD காரணம்!

அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது நீர்க்கட்டி பிரச்சனையான PCOD பிரச்சனையினால் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு ஹார்மோன் சமநிலையின்மையால் உண்டாகலாம். இது பெண்களின் உடலில் ஏற்படும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை கருமுட்டையை பாதிக்கிறது.

இதனால் ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன்கள் சுரப்பு அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, ஆண்களைப் போன்று பெண்களுக்கும் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரித்து காணப்படுகிறது. சிலர், முகத்தில் வளரும் அதிகப்படியான முடியை நீக்குவதற்கு பியூட்டி பார்லர் சென்று முடியை நீக்குவார்கள். ஆனால் இது தற்காலிக தீர்வாகுமே தவிர்த்து முழுமையாக தீர்வாக அமையாது. நிரந்தர தீர்வை பெற, PCODயில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உணவுமுறை உதவுமா?

அதற்கு, உடல் எடையை குறைக்க வேண்டும். மாவுச்சத்து குறைவான உணவு முறையைக் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், PCOD இருக்கும் போது இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் கட்டுப்படுத்த இந்த டயட் சிறந்த தேர்வாகும். குறிப்பாக, அன்றாட உணவில் மாவுச்சத்தை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்து கொள்ள வேண்டும்.

அதே சமயம், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த டயட் முறைகளை பின்பற்ற வேண்டும். PCOD பிரச்சனை உள்ளவர்கள் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் இந்த பாதிப்பிலிருந்து விடுபட முடியும். இதற்கு சிறந்த தீர்வு என்பது, கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த கார்ப் டயட் உணமுறை தான்.

"PCOD பிரச்சனை உள்ளவர்கள், மாவுச்சத்து இல்லாத உணவுமுறைகளை, உதாரணமாக, பாலியோ, கீட்டோ மாதிரியான உணவு முறையை முயற்சித்தால் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையால் ரத்தத்தில் கலக்கும் ஆண்களுக்கான ஹார்மோன்களின் உற்பத்தி குறையும். இதன் மூலமாக முகத்தில் முடி வளரும் பிரச்சனை கட்டுக்குள் வரும்" என்கிறார் மருத்துவர்.