புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலே எச்சரிக்கும் அறிகுறிகள் - ஆய்வு சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!

புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலே எச்சரிக்கும் அறிகுறிகள் - ஆய்வு சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!

தொடர் இருமல் அல்லது இருமும் போது ரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும் என American Cancer Society தளத்தில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடலில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற அசாதாரண வளர்ச்சியால் ஏற்படும் ஒரு சிக்கலான நோய் தான் புற்றுநோய். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட முக்கியமானதாகும். எனவே, உடலின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் குறித்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

திடீர் எடை இழப்பு: திடீர் எடை இழப்பு புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும் என Cleveland Clinic தளத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த காரணமின்றி விரைவான எடை இழப்பு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறது ஆய்வு. உணவு அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணம் இல்லாமல் தொடர்ந்து எடை இழப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கட்டிகள்: உடலின் எந்த பாகத்திலும் கட்டிகள் தோன்றுவது புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இந்த கட்டிகள் மெதுவாக வளரக்கூடும் என்றும், வலியற்ற கட்டிகள் புற்றுநோயின் முதல் அறிகுறியாகவும் இருக்கலாம் என்றும் எச்சரிக்கின்றனர். இந்த கட்டிகள் பொதுவாக மார்பகங்கள், கழுத்து, வயிறு, குடல் அல்லது கல்லீரல் போன்ற பகுதிகளில் உருவாகும் வாய்ப்பு அதிகம்.

இருமல் மற்றும் ரத்தப்போக்கு: தொடர் இருமல் அல்லது இருமும் போது ரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும் என American Cancer Society தளத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சளி அல்லது இருமல் போன்ற காரணங்களால் ஏற்படும் அறிகுறிகளிலிருந்து வேறுபட்டது என்கின்றனர். இருமலில் ரத்தம் வருவது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

சிறுநீரில் ரத்தம்: சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் தென்பட்டால், அது சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என NIH இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், சிறுநீரில் ரத்தம் இருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து இந்த பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சுவாசிப்பதில் சிரமம்: மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் புற்றுநோயின் அறிகுறியாகும். குறிப்பாக புகைப்பிடிப்பவர்களுக்கு, இது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எந்த உடல் உழைப்பும் இல்லாமல் கூட சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

செரிமான பிரச்சனை: அஜீரணம், வயிற்று வலி அல்லது மலம் கழிப்பதில் சிரமம் போன்ற நாள்பட்ட செரிமான பிரச்சனைகளும் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் குறிப்பாக வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் அல்லது கணைய புற்றுநோய் தொடர்புடையதாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர். செரிமான அமைப்பு தொடர்பான ஏதேனும் அசாதாரணம் தொடர்ந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.