மாதவிடாய் நாட்களில் கால்கள் வலிப்பது ஏன்? தடுப்பது எப்படி?

மாதவிடாய் நாட்களில் கால்கள் வலிப்பது ஏன்? தடுப்பது எப்படி?

மாதவிடாய் என்றாலே பெண்களுக்கு ஏற்படும் பெரும் சவால்களில் முதன்மையானது கடுமையான வயிற்று வலி மற்றும் இடுப்பு வலி. இது பொதுவானது என்றாலும், மாதவிடாய் நாட்களில் அல்லது அதற்கு ஒரு வாரத்திற்கு முன் முதல் கால்களில் ஏற்படும் ஒருவித கனமான, குத்துவது போன்ற வலி பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. வயிற்றில் ஏற்படும் வலியை புரிந்து கொண்டாலும், கால்களில் வலி ஏற்படுதற்கான காரணம் என்ன என்பது பெரும்பாலான பெண்களின் எழும் கேள்வியாகும்.

இந்த வலி வெறும் சோர்வு அல்லது மோசமான உடல் நிலை காரணமாக வருவதில்லை. உண்மையில், ஹார்மோன் மாற்றங்கள், ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆழமான உயிரியல் செயல்முறையே இந்த மாதவிடாய் நாட்களின் கால் வலிக்குக் காரணம். இந்த வலி எதனால் ஏற்படுகிறது, இதற்கு எப்படி நிவாரணம் பெறுவது மற்றும் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் காலத்தில் கால்களில் ஏற்படும் வலிக்கு முக்கியக் காரணம், இது ஒரு "திசை திருப்பப்பட்ட வலி" (Referred Pain) ஆகும் என்கிறது NIH ஆய்வு. அதாவது, வலி கர்ப்பப்பையில் இருந்து தொடங்கினாலும், அது நரம்பு வழிகள் வழியாகப் பயணித்து கால்களுக்குச் செல்கிறது.

கால் வலி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்:

புரோஸ்டாகிளாண்டின்களின் அதிகரிப்பு: புரோஸ்டாகிளாண்டின்கள் (Prostaglandins) என்பவை ஹார்மோன் போன்ற வேதிப் பொருட்கள். இவை கர்ப்பப்பை சுருங்கவும், அதன் உட்புறச் சுவரை வெளியேற்றவும் உதவுகின்றன. இந்த வேதிப்பொருட்கள் (குறிப்பாக PGF2α மற்றும் PGE2) கர்ப்பப்பையின் சுருக்கத்தை அதிகப்படுத்துவதுடன், சுற்றியுள்ள ரத்தக் குழாய்களைச் சுருக்கி, அருகிலுள்ள நரம்பு முடிச்சுகளையும் (Nerve Endings) தூண்டுகின்றன. இந்த செயல்முறை காரணமாக, வலி இடுப்புப் பகுதியைத் தாண்டி, கீழ் முதுகு, இடுப்பு மற்றும் கால்கள் வரை பரவுகிறது.

சையாடிக் நரம்பு எரிச்சல்: கர்ப்பப்பை சுருங்கும்போதும், விரிவடையும்போதும், அது சையாடிக் நரம்பை (Sciatic Nerve) எரிச்சலடையச் செய்யலாம் அல்லது அழுத்தலாம். சையாடிக் நரம்பு கீழ் முதுகுப் பகுதியிலிருந்து கால் வரை ஓடுகிறது. இந்த அழுத்தம், சையாட்டிகா வலியைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி, தொடை மற்றும் கன்றுகளில் கனமான அல்லது மந்தமான வலியை உணர வைக்கிறது.

ஹார்மோன் வீக்கம் மற்றும் நீர் தேக்கம்: மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் (Oestrogen) அளவு குறையும்போது, இது உடலில் வீக்கத்தையும், நீர் தேக்கத்தையும் (Fluid Retention) ஏற்படுத்தும். இந்த நீர் தேக்கம் கால்களிலும் கணுக்கால்களிலும் வீக்கத்தை ஏற்படுத்தி, தசைகளைத் தளர்த்தியது போன்ற உணர்வையும், மூட்டுகளில் இறுக்கத்தையும் கொடுக்கிறது.

கால் வலியில் இருந்து நிவாரணம் பெற சில எளிய வழிகள்:

  • வலி உள்ள பகுதியில் வெப்பமூட்டும் ஹீட்டிங் பேட் பயன்படுத்துவது கர்ப்பப்பை மற்றும் கால் தசைகளைத் தளர்த்த உதவும். வீக்கம் அதிகமாக இருந்தால், குளிர் ஒத்தடம் கொடுக்கலாம்.
  • நடைபயிற்சி அல்லது யோகா போன்ற லேசான உடற்பயிற்சிகளைச் செய்வது எண்டோர்பின்களை வெளியிடுகிறது மற்றும் கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமும், மக்னீசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளைச் (கீரை, ஆளி விதைகள், சால்மன் மீன் போன்றவை) சேர்ப்பதன் மூலமும் வீக்கம் மற்றும் தசைப்பிடிப்புகளைக் குறைக்கலாம்.
  • படுத்துக்கொண்டிருக்கும்போது கால்களை உயர்த்தி வைப்பது, திரவம் தேங்குவதைக் குறைத்து, அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

கடுமையான பிரச்சனைக்கு வழிவகுக்குமா?

லேசான கால் வலி பொதுவானது என்றாலும், சில சமயங்களில் இது தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

  • கால் வலி கூர்மையாகவோ, தொடர்ச்சியாகவோ இருந்தால்.
  • ஒரு கால் மட்டும் அதிகமாக வீக்கம் அடைந்தால் அல்லது மரத்துப் போனால்.

மாதவிடாய் முடிந்த பிறகும் வலி நீடித்தாலோ அல்லது காலப்போக்கில் மோசமடைந்தாலோ, உடனடியாக ஒரு மகளிர் மருத்துவ நிபுணரை (Gynaecologist) அணுகுவது அவசியம். இது ஆழமான சிரை ரத்த உறைவு (DVT) அல்லது நரம்புகளைப் பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ் போன்ற தீவிரமான பிரச்சனைகளைக் கண்டறிய உதவும்.

இனப்பெருக்க உறுப்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் அனைத்தும் ஒரே ஹார்மோன் மாற்றங்களுக்குப் பதிலளிப்பதன் விளைவே மாதவிடாய் காலக் கால் வலி. ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மாதவிடாயின் போது ஏற்படும் கால் வலியை தடுக்கும்.