இது மத்திய அரசு வஞ்சக செயல் - வைகோ காட்டம்!

இது மத்திய அரசு வஞ்சக செயல் - வைகோ காட்டம்!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ரத்து செய்தது மத்திய அரசு செய்த வஞ்சக செயல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் பங்கேற்க உள்ளவர்களிடம் வைகோ, மண்டல வாரியாக நேர்காணல் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நேற்று அவர் நேர்காணல் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பிரதமர் மோடி கோவைக்கு வந்திருப்பது அவர் இந்த நகருக்கு செய்த கெடுகளை நினைவூட்டுகிறது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படாது என அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 2011 ம் ஆண்டில் மெட்ரோ திட்டத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள நகரங்களை தேர்வு செய்தனர். தற்போது 20 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள சூரத், பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2011 கணக்கெடுப்புபடி கோவை மாநகரில் 15 லட்சம் மக்கள் இருந்தனர். தற்போது மக்கள் தொகை கூடியுள்ளது.

கோவை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தொழில் நகரம். மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்தது ஒன்றிய அரசு செய்த வஞ்சகம், துரோகம். தமிழ்நாட்டை கிள்ளுகீரையாக நினைத்து, பிரதமர் வரும் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த கோரியும் 24-ம் தேதியன்று செஞ்சிலுவை சங்கம் அருகே மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது தமிழ்நாட்டிற்கு எதிரானது. இதற்காக பிரதமர் மோடிக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்," என்றார்

மேலும் பேசிய அவர், "திருக்குறளை எழுதி வைத்து படித்து மக்களை மோடி ஏமாற்ற முடியாது. எஸ்ஐஆர் ஜனநாயகத்திற்கு விரோதமானது. தேர்தல் ஆணையத்தின் போக்கு ஒரு சார்பாக இருக்கிறது. எஸ்ஐஆர் நிறுத்தப்பட வேண்டும். சாதி, மத மோதல்கள், கொடூரமான வன்முறைகள் இளம் உள்ளங்களில் ஏற்படுவது கவலையளிக்கிறது. இதை தடுக்க நடைபயணம் மேற்கொள்கிறேன். வழக்கமான நடைபயணத்தில் நான் அரசியல் பேசுவது கிடையாது. ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திராவிட மாடல் நல்லாட்சி 2026 க்கு பிறகும் தொடர வேண்டும் என வலியுறுத்துவேன்.

தேர்தல், சீட்கள் பற்றி பேசாத கட்சி மதிமுக. அதை தேர்தல் சமயத்தில் பேசுவோம். மதுக்கடைகளை முழுமையாக அகற்ற அரசு முன்வரவில்லை. 50, 100 மதுக்கடைகளை அடைப்பதால் பலனில்லை. இவற்றை முழுமையாக மூட வேண்டும் என வலியுறுத்துகிறோம். போதைப்பொருள், கஞ்சாவை அகற்ற போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்று வைகோ வலியுறுத்தினார்.