நிதிஷ்குமார் பீகாரில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வாரா? - கி.வீரமணி கேள்வி

நிதிஷ்குமார் பீகாரில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வாரா? - கி.வீரமணி கேள்வி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றிபெற்ற நிதிஷ்குமார், 10-வது முறையாக இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், 5 ஆண்டுகள் அவர் ஆட்சி செய்வாரா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

'பீகார் தேர்தல் முடிவில் வாக்காளர்களும், கட்சிகளும் பெற வேண்டிய படிப்பினைகள் சிறப்பு கூட்டம்' சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நேற்று (நவ.19) நடைபெற்றது. இதில், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், “இதுவரை இந்தியாவில் எத்தனையோ திருட்டுகளை பார்த்துள்ளோம். ஆனால், தற்போது ‘வாக்கு திருட்டு’ என்ற வார்த்தையை முதன்முறையாக கேட்கிறோம். இது தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள காலகட்டம். SIR வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அயோத்தி வழக்கில் நாள் தவறாமல் தினம்தோறும் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், SIR வழக்கில் அவசரம் காட்டவில்லை. மக்கள்தான் எஜமானர்கள் என அரசியல் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்று அவர்களுடைய உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை விழுங்கும் வகையில் SIR கொண்டு வரப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல் நடத்தப்பட்டிருக்கக் கூடாது. இதன் பின்னர் SIR வழக்கில் தீர்ப்பு வந்தால் நியாயம் கிடைக்குமா? நிதிஷ்குமார் 10-வது முறையாக இன்று முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். ஆனால், 5 ஆண்டுகள் ஆட்சி செய்வாரா? என்ற கேள்வி உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது யார் முதலமைச்சர்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயகத்தை காக்கும் முதல் கட்சியாக திமுக உள்ளது. இந்தியாவிற்கு முன்னுதாரணமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அசாமில் மட்டும் ஏன் நடத்தப்படவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

பீகார் ஏன் ?

தொடர்ந்து, “எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பீகாரில் கவனம் செலுத்தினார்கள். தீபாவளி பரிசாக, GST விலை குறைந்ததாக அறிவித்தார்கள். பீகாரில் ஜெயிக்க வேண்டும் என்பது அரசியல் நிர்பந்தம். பிரதமர் அரசுக்கு பெரும்பான்மை இல்லை. பாஜக ஆட்சி தொடர முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவாக உள்ளனர். ஆனால், சந்திரபாபு நாயுடு எப்போது என்ன செய்வார் என்றே தெரியாது. அதனால் பீகாரில் பாஜகவிற்கு வெற்றி மிக முக்கியமானது. எனவே, தேர்தலில் பீகாருக்கு அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் 1 லட்சம் நபர்கள் வாக்காளர்களாக வரவழைக்கப்பட்டனர்.

மாநில கட்சிகளை சார்ந்துதான் அகில இந்திய கட்சிகள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. பீகாரில் கூட்டணிக்குள் இருந்த முரண்பாடுகள் தோல்விக்கு முக்கியப்பங்கு வகித்துள்ளது. தமிழகத்தில் சீட் கேட்காமல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு இயக்கம் திராவிட இயக்கம். கொள்கை கூட்டணியாக அமைந்துள்ளதால் 3 முதல் 4 தேர்தல்களில் எங்களை அசைக்க முடியவில்லை” என்றார்.