கரூர் கூட்ட நெரிசலுக்கும், உயிரிழப்புக்கும் 'இது' தான் காரணம்! அடித்து சொன்ன உண்மை கண்டறியும் குழு!

கரூரில் விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில், 18 பெண்கள், 10 குழந்தைகள், 13 ஆண்கள் என 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் கரூர் சம்பவத்தின் உண்மை அறியும் குழு அறிக்கையை பேராசிரியர் சரஸ்வதி, கீதா உள்ளிட்டோர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று வெளியிட்டு பேசினர்.
அப்போது அவர், “கரூர் துயர சம்பவம் போன்ற இறப்பும், பாதிப்புகளும் இனி வரும் காலங்களில் நிகழா வண்ணம் தடுக்கும் நோக்குடன், கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், காவல் துறை அலுவலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை சந்தித்து உண்மைகளை திரட்டி வந்துள்ளோம். கரூர் கொடுந்துயர் சம்பவத்திற்கு காரணம் எவருடைய சதியோ, உள்நோக்கமோ இல்லை.
இந்த துயர நிகழ்விற்கு முதன்மைக் காரணம் தவெக தலைவர் விஜய் மிக காலதாமதமாக வந்ததே. காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பரப்புரையை தொடங்க வேண்டிய விஜய் சென்னையிலிருந்தே 8.45-க்கு தான் கிளம்பியிருக்கிறார். இதுதான் அடுத்தடுத்த தாமதத்திற்கு தொடக்கமாக இருந்துள்ளது. விஜய் ரசிகர் கூட்டத்தை பெருமளவில் கூட்டி, கூட்டம் காட்டும் எண்ணத்தில், நாமக்கல்லிலிருந்து கரூர் வரும் வழிகளில், வேண்டுமென்றே பல இடங்களில் வண்டியை மெதுவாக இயக்க செய்திருப்பதாகத் தெரிகிறது.
மதிய நேரங்களிலே மேளம், ஆட்டம் பாட்டம் என மக்கள் கூட்டம் இருந்துள்ளது. அன்று காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூடியிருந்திருக்கின்றனர். விஜய்யின் பரப்புரை வண்டி சம்பவ இடத்திற்கு வரும் போது தான் காவல் துறையினரும் வந்துள்ளனர். கரூரில் வாகனம் நிறுத்துவதற்கான வசதியுள்ள இடமாக கருதப்பட்ட வேலுசாமிபுரத்தில், ஒவ்வொரு சந்துக்குள்ளும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை காவல் துறை தடுக்க தவறிவிட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி, தப்பிக்க சந்துகளுக்குள் நுழைந்த மக்கள் இரு சக்கர வாகனங்களால் நிலைதடுமாறி விட்டனர்.
விடுமுறை என்பதால் கூட்டம் பெருமளவில் கூடும் என்பதை உளவுத்துறை கணித்துக் கூறியதா? காவல்துறை அந்த கணிப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததா? என்ற கேள்விகள் எழுகின்றன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே கால தாமதமாக விஜய் வந்துள்ளார். அதுவே நெரிசலுக்கும், உயிரிழப்புக்கும் காரணமாகும். தவெக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் எவ்வித பொறுப்புணர்வும், மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாதவர்களாக நடந்துள்ளனர். ரசிகர் கூட்டத்தை காட்டி கட்சி நடத்தி விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்கள்.
காவல் துறையினர் கூறும்போது, இந்த இடம் 20,000 பேர் நிற்க தகுந்த இடம் எனக் கருதி தான் அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் 10,000 பேர் வருவதாக அனுமானித்தார்கள், ஆனால் நாங்கள் 20,000 என அனுமானித்தோம். கரூரில் வாகன நிறுத்தம் உள்ள ஒரே இடம் என்பதால் தான் அனுமதித்தோம். இவ்வளவு வாகனம் நிறுத்தும் இடம் இருந்தும் ஒவ்வொரு தெருவிலும் ஆயிரக்கணக்கான வண்டிகள் நின்றது உண்மை தான். ஆனால் மாலை 4 அல்லது 5 மணிக்கு மேல் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்த பிறகு தான் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது சிலர் மயங்கி விழுந்துள்ளனர். அதனால், விஜயின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் செருப்பை தூக்கி வீசியதாக அருகிலிருந்தவர்கள் கூறுகின்றனர். விஜய் கூட்டத்திற்கு வருபவர்கள் அங்குள்ள பேனர்களை கிழித்து அதன் மீது இருந்தும் பார்த்தனர். ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட கட்சிகளில் உள்ளவர்கள் தங்களின் தலைவர்கள் பேனர்களைக் கிழிக்க மாட்டார்கள். மேலும், விஜய் வரும் வரையில் காவல் துறையினர் யாரும் வரவில்லை எனவும், சிலர் மயங்கிய பின்னர் தான் ஆம்புலன்ஸ் உள்ளே வந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்“ என பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் கூறினர்.