காலை எழுந்தவுடன் டீ குடித்தால் இவ்வளவு பிரச்சனையா? அப்போ டீ குடிக்க சரியான நேரம் எது?

காலை எழுந்தவுடன் டீ குடித்தால் இவ்வளவு பிரச்சனையா? அப்போ டீ குடிக்க சரியான நேரம் எது?

காலையில் ஒரு கப் சூடான டீயுடன் நாளைத் தொடங்குவது பலருக்கும் ஒரு தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. தூங்கி எழுந்ததும் சூடான டீ குடித்தவுடன் கிடைக்கும் புத்துணர்ச்சி, அன்றைய நாளுக்கான ஆற்றலையும் உற்சாகத்தையும் தருவதாக பலர் நம்புகின்றனர்.

இந்த பழக்கம் இங்குக் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டாலும், வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடலுக்கு நன்மைக்கு பதிலாகத் தீமைகளே அதிகம் ஏற்படக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். டீயில் உள்ள காஃபின், டானின்கள் மற்றும் பிற கூறுகள் வெறும் வயிற்றில் இரைப்பையில் அமிலச் சுரப்பைத் தூண்டி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லை போன்ற செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்கிறது ஆய்வு. அந்த வகையில், பலரது அன்றாட வழக்கமாக இருக்கும் இந்த பழக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சமநிலையின்மை: காலை எழுந்ததும், குறிப்பாக வெறும் வயிற்றில் டீ குடிப்பது அமிலத்தன்மையை ஏற்படுத்தும். 2017ம் ஆண்டு வெளியான NCBI இதழில் வெளியான ஆய்வின்படி, டீயில் உள்ள காஃபின் அமில உற்பத்தியைத் தூண்டுகிறது மேலும், வயிற்றுப் புறணியை எரிச்சலடையச் செய்து அசெளகரியத்தை தூண்டும். கூடுதலாக, டீயில் உள்ள இஞ்சி மற்றும் ஏலக்காயை எந்த உணவும் உண்ணாமல் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது இந்த விளைவுகளை மேலும் மோசமாக்கும்.

ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும்: 2025ம் ஆண்டு வெளியான ஒரு மதிப்பாய்வின்படி, டீயில் டானின்கள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவை உணவில் இருந்து இரும்பு மற்றும் பிற தாதுக்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே, காலை வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடல் மற்ற உணவுகள் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்தை உறிஞ்சும் திறனை குறைக்கலாம். குறிப்பாக, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. என்ன தான் ஆரோக்கியமாக சாப்பிடுகிறோம் என நினைத்தாலும், இந்த சின்ன பழக்கம் ஊட்டச்சத்து உட்கொள்ளலை பாதிக்கிறது என்பதை நினைவில் வைக்கவும்.

நீரிழப்பை ஏற்படுத்தும்: டீ குடிப்பது நீரேற்றமாக உணர்ந்தாலும், காஃபின் லேசான டையூரிடிக் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இது சிறுநீர் கழித்தல் மற்றும் திரவ இழப்பை அதிகரிக்கும். இரவு தூங்கி எழுந்தப்பின் முதலாவதாக டீ குடிப்பது உடலில் உள்ள நீர்ச்சத்தை இழக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், டீ மந்தமாக, சோர்வாக உணர வைக்கும் அல்லது பகலில் தலைவலி ஏற்படுவதற்கும் இது காரணமாகும்.

குமட்டல்: டீயில் டானின் என்ற கசப்பான பாலிபினால்கள் உள்ளது. இதனை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது பலருக்கும் குமட்டல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும். இது டீ பிரியர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த பிரச்சனையை தவிர்க்க எப்போதும் டீயை உணவுக்கும் பின் குடிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளவும்.

ஆற்றல்களை பாதிக்கலாம்: டீ குடித்தவுடன் ஆற்றல் அதிகரிப்பதாக தோன்றினாலும், அதிலுள்ள சர்க்கரை மற்றும் காஃபின் கலவையானது காலையில் ஒருவித மந்தநிலையை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் காஃபின் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது, குறுகிய கால ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது.

வாய்வழி சுகாதாரம்: காலை எழுந்தவுடன் டீ குடிப்பது பற்களை காலப்போக்கில் கறையாக்கும். மேலும், பற்களில் பற்சிப்பியையும் காலப்போக்கில் பலவீனப்படுத்துகிறது. டீயில் உள்ள சர்க்கரை வாயில் உள்ள பாக்டீரியாக்களை வளர்த்து துவாரங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிலும், பல் தேய்ப்பதற்கு முன் டீ குடிப்பது நிலைமையை மோசமாக்கும்.

நடுக்கம், பதட்டம்: காஃபின் உணர்திறன் உள்ளவர்கள், வெறும் வயிற்றில் டீ குடிப்பது பதட்டம், நடுக்கம் அல்லது படபடப்பிற்கு வழிவகுக்கும். வெறும் வயிற்றில் காஃபின் விரைவாக உறிஞ்சப்படுவதால் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். டானின் மன தெளிவை மங்கச் செய்து கவன செதறலுக்கு வழிவக்கும்.

டீ குடிக்க சிறந்த நேரம் எது? காலை உணவுக்குப் பின் டீ குடிப்பது ஏற்றதாகும். வயிறு நிரம்பி இருப்பதால் இது அமிலத்தன்மை அபாயத்தை குறைக்கும். இல்லையென்றால், மதிய உணவுக்கு பின் குடிக்கலாம். இதனால் தூக்கம் வருவது தடுக்கப்பட்டு சோம்பல் இல்லாமல் இருக்கலாம்.