அதிகமா முடி கொட்டுதா? ஆண்களே உஷார்!
ஆண்களுக்கு ஏற்படும் கடுமையான முடி உதிர்தல் (Severe Baldness) மற்றும் இளம் வயதிலேயே மாரடைப்பு வருவதற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதை சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
நெற்றியின் முன்புறம் மற்றும் உச்சந்தலையில் அதிக முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுவது, மரபணு ரீதியாகவும் ஹார்மோன் ரீதியாகவும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதற்கான ஒரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாகவே ஆண்களின் வழுக்கைக்கும் (Male Pattern Baldness) இதய ஆரோக்கியத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்த புதிய ஆராய்ச்சி, குறிப்பாக 40 வயதிற்குட்பட்ட ஆண்களின் மீது கவனம் செலுத்தியது.
அந்த வகையில், Severity of Alopecia Predicts Coronary Changes and Arterial Stiffness in Untreated Hypertensive Men என்ற தலைப்பில் NCBI ஆய்வுத்தளத்தில் இது தொடர்பான ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே அதிக முடி உதிர்வுள்ள ஆண்களுக்கு, முடி உதிர்தல் இல்லாத ஆண்களைக் காட்டிலும், இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, நெற்றி மற்றும் உச்சந்தலையில் முடி உதிர்ந்து, மண்டை ஓட்டின் மேற்புறம் தெளிவாகத் தெரியும் அளவிற்கு வழுக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து மிக அதிகமாக உள்ளது. முடி உதிர்தல் என்பது இதய நோய்களுக்கு நேரடியான காரணம் அல்ல.
ஆனால், இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் பொதுவான சில அடிப்படைக் காரணிகள் உள்ளன. அதாவது, முடி உதிர்வதற்கும் இதய நோய்கள் வருவதற்கும் காரணமாக இருக்கும் காரணிகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன.
எதனால் இந்தத் தொடர்பு? முடி உதிர்தல் மற்றும் இதய நோய் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள பொதுவான தொடர்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாட்பட்ட அழற்சி: சில வகையான முடி உதிர்தல் மற்றும் இதய அடைப்பு இரண்டுமே உடலில் ஏற்படும் நாட்பட்ட அழற்சியுடன் (நீண்ட கால வீக்கம்) தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. உடலில் வீக்கம் அதிகமாக இருக்கும்போது, அது தமனிகளைப் பாதித்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
மரபணு இணைப்புகள்: முடி உதிர்தல் மற்றும் இதய நோய் ஆகிய இரண்டிற்கும் பங்களிக்கும் சில பொதுவான மரபணுக்களும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் முடி உதிர்தலைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், இது ஒரு எச்சரிக்கை மணியாகக் கருதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
உங்களுக்கு இளமையிலேயே அதாவது, 40 வயதிற்கு முன் அதிக முடி உதிர்தல் இருந்தால், நீங்கள் இயற்கையாகவே மற்றவர்களை விட இதய நோய்கள் வரும் அதிக ஆபத்துக் குழுவில் இருக்கிறீர்கள் என்று பொருள். இத்தகைய ஆண்கள், தங்கள் வாழ்க்கை முறையிலும் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். முறையான உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை மிகவும் அவசியம்.
முடி உதிர்தல் உள்ள ஆண்கள் உடனடியாக தங்கள் மருத்துவரை அணுகி, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவு போன்ற இதய அபாய காரணிகளைச் சோதித்து உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. முடி உதிர்தல் என்பது ஒரு அழகு சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது உங்களின் உள்ளார்ந்த உடல் ஆரோக்கியத்தின் ஒரு பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் என்பதை இந்த ஆராய்ச்சி உணர்த்துகிறது.