தக்காளியை பச்சையா சாப்பிடுபவரா நீங்கள்? இந்த நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!

தக்காளியை பச்சையா சாப்பிடுபவரா நீங்கள்? இந்த நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!

சாதத்திற்கு ஊற்றி சாப்பிடும் குழம்பு, ரசம் முதல் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸிற்கு தொட்டு சாப்பிடும் சாஸ் வரை உணவில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிலர் தக்காளியை பச்சையாக விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வீட்டில் வளர்க்கப்படும் அல்லது ஆர்கானிக் தக்காளியை பச்சையாகவோ அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம் என்கிறது ஆய்வு. அதன்படி, பச்சை தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதயம் காக்கும் நண்பன்: தக்காளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துகிறது. மேலும், தமனிகளைப் பாதுகாக்கும் லைக்கோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன. பச்சைத் தக்காளியில் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆனால், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. இவை அனைத்தும் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகின்றன. இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அழகான சரும பராமரிப்பு: சருமப் பராமரிப்புக்காக ஆயிரக்கணக்கில் செலவழித்தும் எந்த பயணும் இல்லையா? அப்ப தக்காளி கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு. பளபளப்பான சருமம் வேண்டும் என நினைப்பவர்கள், பச்சை தக்காளி சாப்பிடுவது அவசியம். தக்காளியில் உள்ள லைக்கோபீன், பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் C ஆகியவை சரும பாதிப்பைக் குறைத்து, கொலாஜனை அதிகரிக்க உதவுகின்றன. தக்காளியை பச்சையாக சாப்பிடுவது, காலப்போக்கில் சருமம் புத்துணர்ச்சியுடனும் இளமையாகவும் இருக்கும்.

செரிமானம்: வயிறு உப்புசம் (Bloated) அல்லது மலச்சிக்கல் (Constipated) பிரச்சனையால் அவதிப்பட்டால், தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. பச்சைத் தக்காளியில் உள்ள அதிக நீர் மற்றும் நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தவை. இவை இயற்கையாகவே உடலைச் சுத்தப்படுத்த உதவுகின்றன. மேலும், தக்காளியில் உள்ள லேசான அமிலங்கள், உணவைச் சரியாக ஜீரணிக்கத் தேவையான இரைப்பைச் சாறுகளை (stomach juices) உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன.

எடை கட்டுப்பாடு: எடையை குறைக்க நினைப்பவர்கள், தக்காளியை பச்சையாக சாப்பிடுவது சிறந்த தேர்வாகும் என்கிறது ஆய்வு. இதில் கலோரிகள் குறைவு, நீர்ச்சத்து அதிகம் என்பதால் பசியாக உணரும் போது பச்சையாக ஒரு தக்காளி சாப்பிடுவது வயிறு நிரம்பிய உணர்வை தரும். மேலும், தக்காளியில் உள்ள இயற்கையான இனிப்பு, ஸ்வீட் க்ரேவிங்க்ஸை தடுக்கிறது.

புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு: தக்காளியின் சிகப்பு நிறம் லைக்கோபீன் சத்தில் இருந்து வருகிறது. இது புராஸ்டேட் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது என NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

மன ஆரோக்கியம்: தக்காளி உடலுக்கு மட்டுமல்ல, மனநிலையையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தக்காளியில் உள்ள ஃபோலேட் (Folate) மற்றும் மெக்னீசியம் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. ஃபோலேட் மனச்சோர்வு (depression) போன்றவற்றுடன் தொடர்புடைய சேர்மங்களைக் குறைக்க உதவுகிறது. பச்சையான தக்காளியை உணவில் சேர்ப்பது ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்கவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவும்.