ஹெல்மெட் அணிந்தால் இலவச வெள்ளி நாணயம்: தஞ்சையை திக்குமுக்காட செய்த போலீசார்
புத்தாண்டு தினத்தையொட்டி ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 4 கிராம் வெள்ளி நாணயத்தை தஞ்சாவூர் போலீசார் வழங்கி புதிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
2026 புத்தாண்டை அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தஞ்சையை அடுத்த திருக்கானூர்ப்பட்டியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 'களவாணி' திரைப்பட நடிகர் துரை சுதாகர், நகைச்சுவை நடிகர்கள் சிங்கம்புலி, சக்தி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துதெரிவித்தனர். தொடர்ந்து, பல்வேறு கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
அதேபோல், புத்தாண்டு நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் 4 கிராம் வெள்ளி நாணயத்தை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று புத்தாண்டையொட்டி, தஞ்சை ஆற்றுப்பாலம் அருகில் மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த 50 பேருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்ததோடு, தலா 4 கிராம் வெள்ளி நாணயத்தையும் பரிசாக வழங்கினார். இதை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பிரபுராஜ்குமார், ஞானசுந்தரி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.