த்ரிஷா, மணிரத்னம் வீடு உட்பட 8 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், கோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், ஆழ்வார்பேட்டையில் உள்ள திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வீடு, ராயப்பேட்டை செனடாப் சாலையில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, அண்ணாநகரில் நடிகர் விஷால் வீடு, வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகம், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம் உள்ளிட்ட 8 இடங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணர்களும், போலீஸாரும் அங்கு சென்று சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் அந்த மின்னஞ்சல், வதந்தியை பரப்பும் நோக்கத்தில் வந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் அண்மைக் காலமாக வதந்தியை கிளப்பும் வகையில் இதுபோன்று தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.