அடேங்கப்பா... ஒரே ஆண்டில் மளமளவென கூடிய யானைகள் எண்ணிக்கை! 3-வது இடத்தில் தமிழ்நாடு

அடேங்கப்பா... ஒரே ஆண்டில் மளமளவென கூடிய யானைகள் எண்ணிக்கை! 3-வது இடத்தில் தமிழ்நாடு

காடுகளை உருவாக்குவதில் யானைகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய யானைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டில் அண்மையில் ஒருங்கிணைந்த காட்டு யானைகள் கணக்கெடுப்பை, கடந்த மே மாதம் 23 முதல் 25ம் தேதி வரை, கர்நாடகா வனத் துறையுடன் சேர்ந்து தமிழ்நாடு வனத்துறை நடத்தியது.

மாநிலம் முழுவதும் 26 வனக் கோட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணிகளில், மொத்தம் 2,043 வனப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 3,170 காட்டு யானைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் காட்டு யானைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்தாண்டை விட இந்த ஆண்டு யானைகளின் எண்ணிக்கை 107 அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1,777 யானைகளும், கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,345 யானைகளும் உள்ளன. 48 யானைகள் மற்ற பகுதிகளில் உள்ளன.

குறிப்பாக உதகை வனக் கோட்டத்தில் அதிக யானைகள் உள்ளன. நீலகிரி மாவட்டம் உதகை வனக்கோட்டத்தில் 325 காட்டு யானைகளும், மசினகுடி வனக்கோட்டத்தில் 185 காட்டு யானைகளும், நீலகிரி வனக்கோட்டத்தில் 36 காட்டு யானைகளும், கூடலூர் வனக்கோட்டத்தில் 137 காட்டு யானைகளும் உள்ளன. இதே போல ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் 224 காட்டு யானைகளும், திருப்பூர் வனக்கோட்டத்தில் 200 காட்டு யானைகளும் உள்ளன.

கோவை வனக்கோட்டத்தில் உள்ள மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெ.நா.பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களில் மொத்தம் 228 காட்டு யானைகள் உள்ளன. இதேபோல சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் 329 காட்டு யானைகளும், ஆசனூர் வனக்கோட்டத்தில் 360 காட்டு யானைகளும், ஈரோடு வனக்கோட்டத்தில் 115 காட்டு யானைகளும் உள்ளன. காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2023-2025 யானைகள் கணக்கெடுப்பின்படி, அதிக யானைகள் உள்ள மாநிலங்கள் வரிசையில், முதலிடத்தில் கர்நாடகா 6,049, இரண்டாவது அசாம் 5,719, மூன்றாவது தமிழ்நாடு 3,170 மற்றும் நான்காவதாக கேரளா 1,793 ஆகிய மாநிலங்கள் உள்ளன.