உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

உலகக்கோப்பை ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்முறை சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடைபெற்றன.

இதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், சீனா, எகிப்து, போலந்து, பிரேசில், சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மூத்த வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, அனாஹத், செந்தில் வேலவன், அபய் சிங் ஆகியோர் விளையாடினர்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், தொடரில் பங்கேற்ற அனைத்து நாட்டினரும் தங்கள் நாட்டுக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர். உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடருக்கான கோப்பையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உலகக் ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவர் செனா ஊல்ட்ரிட்ஜ், இந்திய ஸ்குவாஷ் சம்மேளன தலைவர் அனில் வாதவா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த தொடரின் பி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி முதல் போட்டியில் ஸ்விட்சர்லாந்தை எதிர்கொண்டு 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பிரேசில் அணியுடன் மோதி 4-0 என்ற கணக்கில் அந்த அணியையும் வீழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதில் முந்தைய சாம்பியனான எகிப்துடன் மோதிய நிலையில், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றது.

மற்றொரு இறுதி ஆட்டத்தில் ஜப்பான் - ஹாங்காங் அணிகள் மோதிய நிலையில் 2-2 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனால் செட் அடிப்படையில் ஹாங்காங் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின.

ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்குவாஷ் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.