சாலையில் கேட்பாரற்று கிடந்த 11 சவரன் நகை; போலீசில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு!
சேலம் மாவட்டத்தில் சாலையில் கிடந்த 11 சவரன் நகையை கண்டெடுத்து நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த தம்பதியை போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரி மற்றும் சேலம் முன்னாள் எம்பி எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபாலகிருஷ்ணன். இவரது மனைவி பூங்கோதை. தம்பதி இருவரும் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சேலம் வந்துள்ளனர்.
பின்னர் சேலம் ஜங்சனில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் மூலம் லீ பஜார் வழியாக வீட்டிற்கு சென்ற போது பூங்கோதை தன்னுடைய கை பையை தவற விட்டுள்ளார். இது குறித்து பூங்கோதை அளித்த புகாரின்பேரில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஷா - பர்வீன் தம்பதி நேற்று அம்மாபேட்டையில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு லீ பஜார் வழியாக வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது லீ பஜார் பாலம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த கை பையை தம்பதி கண்டெடுத்துள்ளனர்.
அந்த பைக்குள் 11 சவரன் தங்க நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதி சாலையில் கிடந்த நகைகளை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் தங்க நகை மற்றும் கைப்பையை ஒப்படைத்தனர்.
இதன் பின்னர் நகை பையை தவற விட்ட வேணு கோபாலகிருஷ்ணன் - பூங்கோதை தம்பதியை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைத்த போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரி நகைகளை அவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் சாலையில் கிடந்த நகை பையை போலீசாரிடம் ஒப்படைத்த பாஷா - பர்வீன் தம்பதியின் நேர்மையை பாராட்டி கௌரவித்தார். இதை தொடர்ந்து நகைகளை தவற விட்ட குடும்பத்தினர் நகைகளை ஒப்படைத்த குடும்பத்தாருக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் வறுமையிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்ட தம்பதிக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே சாலையில் கிடந்த 11 சவரன் நகையை மீட்டு காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்த பாஷா, அவரது மனைவி பர்வீன் மற்றும் அவர்களது மகன் ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லாஹ் ஆகியோரின் நேர்மையை பாராட்டி சேலம் முன்னாள் MP எஸ்.ஆர். பார்த்திபன் நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தி, பாராட்டி ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கி சிறப்பித்தார். அப்போது வழக்கறிஞர் பூமொழி மற்றும் பலர் உடன் இருந்தனர்.