தேனி வந்த ஹாக்கி உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

தேனி வந்த ஹாக்கி உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

தேனி வருகை தந்த ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

14 ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டி நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து, சீனா உள்ளிட்ட 24 நாடுகளை சேர்ந்த அணிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற உள்ளன. இத்தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் அணி விலகியதை அடுத்து, ஓமன் அணிக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நவ.5 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தொடருக்கான கோப்பை மற்றும் லோகோவை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும், ஹாக்கி போட்டியின் உலகக் கோப்பையை தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக கொண்டு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று (நவ.16) தேனி மாவட்டத்திற்கு பேருந்து மூலம் வருகை தந்த உலகக் கோப்பைக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த உலகக் கோப்பையை பொதுமக்கள் பார்வைக்காக தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட எஸ்.பி ஸ்நேகா பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் ஹாக்கி விளையாடி உலகக் கோப்பைக்கான லோகோவை அறிமுகப்படுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.