பீகார் முதல்வராக 10-ஆவது முறை பதவியேற்று நிதீஷ் குமார் சாதனை! 26 அமைச்சர்களும் பொறுப்பேற்பு
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் 26 அமைச்சர்களும் பதவி பிரமாண உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பீகாரில் 10-ஆவது முறையாக முதலமைச்சர் இருக்கையை அலங்கரிக்கும் தனிநபர் என்ற பெருமையை நிதீஷ் குமார் இதன் மூலம் ஈட்டியுள்ளார். மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நிதீஷ் குமார் உள்ளிட்டோருக்கு பதவி பிரமாணத்தையும், ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு), பா.ஜ.க, லோக் ஜனசக்தி உள்ளிட்ட பிற கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ) களம் கண்டது. இதில் அந்த கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து களம்கண்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இணைந்த மகாகத்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
அந்த வகையில், இன்றைய பீகார் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வில், போட்டியிட்ட 101 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 89 இடங்களில் வெற்றிப்பெற்ற பா.ஜ.க 14 அமைச்சர் பதவிகளை தக்கவைத்து கொண்டுள்ளது. அடுத்தபடியாக, 85 இடங்களை கைப்பற்றிய முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஜே.டி.யு கட்சி சார்பில் 8 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் 2 அமைச்சர்களும், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மன்ஜி-யின் இந்துஸ்தான் அவாம் மோர்சா கட்சி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திரா குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்சா கட்சிகளின் சார்பில் தலா ஒரு அமைச்சர்களும் என மொத்தம் 26 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர்கள் யோகி ஆதித்யநாத் (உத்தரப்பிரதேசம்), தேவேந்திர ஃபட்னாவிஸ் (மகாராஷ்டிரா), மோகன் யாதவ் (மத்தியப் பிரதேசம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரப் பிரதேசம்), நயாப் சிங் சைனி (ஹரியானா), பஜன் லால் சர்மா (ராஜஸ்தான்), பூபேந்திர படேல் (குஜராத்), புஷ்கர் சிங் தாமி (உத்தரகண்ட்), மோகன் சரண் மஜ்ஹி (ஒடிசா), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), நெய்பியு ரியோ (நாகலாந்து), மாணிக் சாஹா (திரிபுரா), பிரேம் சிங் தமாங் (சிக்கிம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களும் பீகார் முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். நாட்டின் முக்கிய பதவிகளை வகிக்கும் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் பாதுகாப்பிற்காக சுமார் 2,500 பீகார் மாநில போலீசார் ஈடுபட்டனர்.