டித்வா புயல்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

டித்வா புயல்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

டித்வா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, புயலானது இலங்கை திரிகோண மலையிலிருந்து வடமேற்கே சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து வடமேற்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 330 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 30ஆம் தேதி அதிகாலை, வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகே நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

புயலால் தற்போது இலங்கை முழுவதும் அதி கனமழை பெய்து வரும் நிலையில், புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இங்கும் மழை அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த புயல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 14 மாவட்டங்ளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக, தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையிலும் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.