தீபாவளிக்கு மறுநாள் லீவு வேண்டும் - தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

தீபாவளிக்கு அடுத்தநாள் (அக்.21) அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளிக்கு வெளியூர் சென்ற பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதில் சிரமம் உள்ளதால், தீபாவளிக்கு மறுநாள் 21 ஆம் தேதி, ஈடு செய்யும் விடுமுறையாக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தீபாவளிக்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 சனி மற்றும் 19 ஞாயிற்றுக்கிழமை என்பதால், பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், பணியாளர்களின் நலனைக் கருதி அக்டோபர் 21 ஆம் தேதி ஈடு செய்யும் விடுமுறையாக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலகச் சங்கம் வெளியிட்டு அறிக்கையில், ‘ தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் 20 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பெரும்பான்மையானோர் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தீபாவளி திங்கட்கிழமை வருவதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பணியாளர்கள் 21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புவதில் மிகுந்த சிரமம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, தீபாவளியை குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் 21 ஆம் தேதி ஒருநாள் மட்டும் ஈடுசெய்யும் விடுமுறை வழங்க வேண்டும்’ என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல், தீபாவளி முடிந்து வருகிற 21 ஆம் தேதி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலங்கங்களுக்கு பொது விடுமுறையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில், பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் செல்வார்கள்.
அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்குச் சென்று வருவார்கள். பொதுப் போக்குவரத்துக்கும் கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும். எனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.