முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தோல்வியை தழுவிய இந்திய அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 159 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 189 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 31 ரன்களை எடுத்திருந்தார். அதேபோல், இந்திய அணியில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்திருந்தார். ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணிக்கு 124 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி வெறும் 93 ரன்களில் ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்கவில்லை. இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஒருவர் பின் ஒருவராக அவுட்டாகினர்.
தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது குறித்து இந்திய அணியின் துணை கேட்பன் ரிஷப் பந்த் பேசியதாவது, "ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு எங்களுடைய ஆட்டத்தை மாற்றியமைத்து நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தவறிவிட்டோம்" என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “தோல்வியடைந்து விட்டதால் அதை பற்றி யோசித்துக்கொண்டே இருக்க முடியாது. இந்திய அணி எப்படியாவது இலக்கை அடைந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். போட்டியின்போது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே போனதால் எங்களுடைய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த முறை ஆடுகளமும் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்ததால், 120 என்ற இலக்கே மிகவும் கடினமானதாக இருந்தது. அடுத்த போட்டியில் கண்டிப்பாக வலிமையுடன் திரும்பி வருவோம்” என்று உறுதியளித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வருகிற நவம்பர் 22ஆம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவிருக்கிறது.