ஆஸ்திரேலியா ஓபன் 2026: அடுத்த சுற்றில் ஜோகோவிச், மெத்வதேவ்

ஆஸ்திரேலியா ஓபன் 2026: அடுத்த சுற்றில் ஜோகோவிச், மெத்வதேவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவாக் ஜோகோவிச், டேனியல் மெத்வதேவ், காஸ்பர் ரூட், ஸ்டான் வவ்ரிங்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

டென்னிஸ் விளையாட்டின் பாரம்பரிய மற்றும் புகழ் பெற்ற கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று ஆஸ்திரேலிய ஓபன். இந்த தொடரின் நடப்பு சீசனானது மெல்போர்னில் நேற்றைய தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் உலகின் நட்சத்திர வீரர்கள் கார்லோஸ் அல்காரஸ், அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அரினா சபலென்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றிக்கு முன்னேறினர்.

நோவாக் ஜோகோவிச் அசத்தல்

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயினைச் சேர்ந்த பெட்ரோ மார்டினெஸை எதிர்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில், ஜோகோவிச் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளை வென்று ஆதிக்கம் செலுத்தனர்.

இதில் அவர் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்தடுத்த செட் களை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெட்ரோ மார்டினெஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.

அடுத்த சுற்றில் மெத்வதேவ்

இன்று நடைபெற்ற மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ரஷ்யாவை சேர்ந்த டேனியல் மெத்வதேவ், நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெஸ்பர் டி ஜாங்கை எதிர் கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் கடும் போட்டிக்கு பிறகு முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 6-2 என்ற கணக்கில் வென்றார்.

மறுபக்கம் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் இறங்கிய ஜெஸ்பர், மூன்றாவது செட்டில் இறுதிவரை போராடிய நிலையிலும் 7-6 என்ற கணக்கில் செட்டை இழந்தார். இதன் மூலம் மெத்வதேவ் 7-5, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜெஸ்பர் டி ஜாங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இது தவிர, காஸ்பர் ரூட், டாமி பவுல், ஸ்டான் வாவ்ரிங்கா ஆகியோரும் தங்களுடைய முதல் சுற்றில் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

மகளிர் பிரிவில் ஸ்வியாடெக், கஃப் அசத்தல்

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் யு யுவானை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்வியாடெக் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் வென்றார். அதன் பின் நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 6-3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றியதுடன் சீன வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு மகளிர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை கோகோ கஃப், உஸ்பேகிஸ்தான் வீராங்கனை கமிலா ரகிமோவாவை எதிர் கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகோ கஃப் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கமிலா ரகிமோவாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேபோல், மற்றொரு அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலாவும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நாளைய முக்கிய போட்டிகள்

ஆஸ்திரேலிய ஓபென் டென்னிஸ் தொடரில் நாளை நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகளீல் இத்தாலியின் ஜானிக் சின்னர், பல்கெரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் பென் ஷெல்டன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.