ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2025: காலிறுதியில் லக்ஷயா, ஆயுஷ்; ஏமாற்றமளித்த ஸ்ரீகாந்த், பிரனாய்!
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இந்திய வீரர்கள் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி அசத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பு சீசன் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஹச்.எஸ்.பிரனாய், இந்தோனேசியாவின் அல்வி ஃபர்ஹானை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியின் முதல் செட்டில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன் காரணமாக ஆட்டத்தின் பரபரப்பு கூடியது.
பின்னர் ஃபர்ஹான் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி பிரனாய்க்கு அதிர்ச்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஃபர்ஹான் 21-10 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் அல்வி ஃபர்ஹான் 21-19. 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஹச்.எஸ்.பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதேசமயம் தோல்வியடைந்த பிரனாய் தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மற்றொரு ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு மந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் ஷி யு யென்னை எதிர்த்து விளையாடினார். இதில் ஆட்டத்தின் முதல் செட்டை லக்ஷயா சென் 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், இரண்டாவது செட்டை யு சென் 21-13 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டத்தின் முடிவானது மூன்றாவது செட்டிற்கு சென்றது.
மூன்றாம் செட் ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடிய லக்ஷயா சென் 21-13 என்ற கணக்கில் அதனை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் லக்ஷ்யா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் தைவானின் ஷி யு யென்னை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.
காலிறுதியில் ஆயுஷ்
மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் கொடை நரோகோவை எதிர்த்து இந்தியாவின் நட்சத்திர வீரர் ஆயுஷ் ஷெட்டி பலப்பரீட்சை நடத்தினார். சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஆயுஷ் ஷெட்டி 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட ஆயுஷ் ஷெட்டி 21-16 என்ற கணக்கில் அதனையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற கணக்கில் ஜப்பானின் கொடை நரோகோவை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி ஆயுஷ் ஷெட்டி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நட்சத்திர வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இருந்தே இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆட்டத்தின் மீதான பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. இறுதியில் ஒகாவா 22-20 என்ற கணக்கில் முதல் செட்டை போராடி வென்றார்.
பின்னர் தொடங்கிய இரண்டாம் செட் ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட ஒகாவா 21-16 என்ற கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நடப்பு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் லக்ஷயா சென், ஆயூஷ் ஷெட்டி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தாலும், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹச்.எஸ்.பிரனாய் ஆகியோர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.