15 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள், 144 ரன்கள்: சரவெடியாய் வெடித்து சாதனை படைத்த 'பாஸ் பேபி' சூர்யவன்ஷி

15 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள், 144 ரன்கள்: சரவெடியாய் வெடித்து சாதனை படைத்த 'பாஸ் பேபி' சூர்யவன்ஷி

யுஏஇ அணிக்கு எதிரான ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய ஏ அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.

சூர்யவன்ஷி சாதனை சதம்

மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 17 பந்துகளில் அரைசதத்தையும், 32 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்து மிராட்டினார். மறுபக்கம் அவருடன் இணைந்து விளையாடி வந்த நமன் தீர் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தமாக 34 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 42 பந்துகளில் 11 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் என மொத்தமாக 144 ரனக்ளைக் குவித்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜித்தேஷ் சர்மா தனது பங்கிற்கு அரைசதத்தை பதிவு செய்ததுடன், 32 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 83 ரன்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதன் மூலம் இந்திய ஏ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 297 ரன்களைக் குவித்தது. யுஏஇ அணி தரப்பில் முகமது ஃபராசுதின், அயான் கான், முகமது அர்ஃபான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய யுஏஇ அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அந்த அணியில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சோஹைப் கான் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் கடந்ததுடன், 3 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதனால் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய ஏ அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அபார் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து இந்திய அணி நாளைய தினம் பாகிஸ்தான் ஏ அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

சூர்யவன்ஷி சாதனை

யுஏஇக்கு எதிரான ரைசிங் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வைபவ் வெறும் 32 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 35 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் இரண்டு சதங்களை அடித்த உலகின் ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக வேகமான சதம் அடித்த ரிஷப் பந்தின் சாதனையை வைபவ் இப்போது சமன் செய்துள்ளார். 28 பந்துகளில் சதம் அடித்த ஊர்வில் படேல் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

இதுதவிர டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 15 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக புனீத் பிஷ்ட் மிசோரமுக்கு எதிரான போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்துள்ளதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.