உலக பிளிட்ஸ் தொடர்: செஸ் சாம்பியன் டி.குகேஷ் அதிர்ச்சி தோல்வி

உலக பிளிட்ஸ் தொடர்: செஸ் சாம்பியன் டி.குகேஷ் அதிர்ச்சி தோல்வி

உலக பிளிட்ஸ் செஸ் தொடரின் மூன்றாம் சுற்றில் இந்திய வீரர் டி.குகேஷ் அமெரிக்க-ரஷ்யரான 12 வயது வீரர் செர்ஜி ஸ்க்லோனியிடம் தோல்வியடைந்து ஏமாற்றமளித்துள்ளார்.

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதில் ஆடவர் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், மகளிர் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதேசமயம் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி மற்றும் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி ஆகியோர் 3ஆம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து பிளிட்ஸ் போட்டிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீரர் குகேஷ், அமெரிக்க-ரஷ்யரானா செர்ஜி ஸ்க்லோனியை எதிர்கொண்டார். இதில் குகேஷின் பிளிட்ஸ் தரவரிசையில் 2628 எலோ புள்ளிகளைப் பெற்றிருந்தார். மறுபக்கம் செர்ஜி ஸ்க்லோனி பிளிட்ஸ் தரவரிசையில் 2400 எலோ புள்ளிகளை எடுத்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சுமார் 228 எலோ புள்ளிகள் வித்தியாசம் இருந்தது.

மேலும் குகேஷ் ஒரு சூப்பர் கிராண்ட்மாஸ்டர், ஸ்க்லோனி ஒரு ஃபிடே மாஸ்டர் மட்டுமே என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. அதற்கேற்ப இந்த ஆட்டத்தில் குகேஷ் கருப்புக் காய்களுடன் விளையாடினார். இதில் இருவரும் சிறப்பாக விளையாட ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில், இரு வீரர்களுக்கும் கடுமையான நேர நெருக்கடி ஏற்பட்டது.

பிளிட்ஸ் ஒருபோதும் குகேஷின் விருப்பமான நிகழ்வாக இருந்ததில்லை என்றாலும், 12 வயது வீரரிடம் தோல்வியைடந்தது தற்சமயம் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. மேலும் இது 2025 ஆம் ஆண்டில் குகேஷுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், முன்னதாக ஃபிடே உலகக் கோப்பை தொடரின் போது குகேஷ் மூன்றாம் சுற்றுடன் வேளியேறினார். அதேபோல் தற்போது உலக பிளிட்ஸ் தொடரிலும் மூன்றாம் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளது அவர் மீதான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.