அதிகாலையில் பயங்கரம்; ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை தீ விபத்தில் நோயாளிகள் 6 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், விபத்து காய சிகிச்சை பிரிவில் இருந்த 6 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார்.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சவாய் மான் சிங் (Sawai Man Singh - SMS) அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று (அக்.6) அதிகாலை மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து காய சிகிச்சை பிரிவு முழுவதும் தீ பரவி புகையால் சூழப்பட்டதால் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்றினர். இருப்பினும், விபத்து காய சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 11 பேரில், 6 நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் தீபக் மகேஸ்வரி உறுதிப்படுத்தியுள்ளார்