எதிரி கப்பல்களை துவம்சம் செய்ய களமிறங்கும் ‘ஐஎன்எஸ் அன்ட்ரோத்’! அப்படி என்ன சிறப்பு?

ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த, 80% உள்நாட்டு உதிரி பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் அன்ட்ரோத்’ நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இது இந்திய கடற்படையில் இணைக்கப்படும் இரண்டாவது ஆன்டி சப்மெரின் வார்ஃபேர் ஷாலோ வாட்டர் க்ராஃப்ட் (ASW-SWC) கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்றது. இதில் கிழக்கு கடற்படை தளத்தின் தளபதி, வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் தலைமை தாங்கினார்.
ஆன்டி சப்மெரின் வார்ஃபேர் ஷாலோ வாட்டர் க்ராஃப்ட் என்பது, கடலின் ஆழமற்ற பகுதிகளில் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து, அவற்றை அழிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு தொழில்நுட்பங்கள் நிறைந்த வகை போர் கப்பல் ஆகும்.
இந்த புதிய போர் கப்பலின் இணைப்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு திறன்களை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் என இந்திய கடற்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலோர ஆழமற்ற பகுதிகளில் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ள இந்த கப்பல் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் (GRSE) நிறுவனமே இந்த கப்பலை உருவாக்கியுள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல், இந்தியாவின் கடல் பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ (தன்னிறைவு) நோக்கத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்ட்ரோத் கப்பல் இணைப்பு, இந்திய கடற்படையின் போர் திறன் வளர்ந்து வருவதையும், உள்நாட்டு தொழில் நுட்ப வளர்ச்சியையும் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. சமீபத்தில் இணைக்கப்பட்ட அர்நாலா, நிஸ்தார், உதயகிரி, நில்கிரி ஆகிய கப்பல்களுடன் இந்த புதிய கப்பலும் சேர்ந்து நமது கடலோரப் பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும்.