யு19 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வேவை பந்தாடியது இந்தியா

யு19 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வேவை பந்தாடியது இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான யு19 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐசிசி யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய யு19 அணியை எதிர்த்து ஜிம்பாப்வே யு19 அணி பலப்பரீட்சை நடத்தியது. புலவாயோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த ஆரோன் ஜார்ஜ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரேவும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வேதந்த் திரிவேதியும் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷியும் அரைசதம் கடந்த கையோடு பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த விஹால் மல்ஹோத்ரா-அபிக்யான் குண்டு இணை சிறப்பாக செயல்பட்டு அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் அபிக்யான் குண்டு அரைசதம் கடந்த நிலையில் 61 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கனிஷ்க் சௌகான் 3 ரன்களிலும், அம்ரிஷ் 21 ரன்களிலும், கிலான் படேல் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர்.

மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த விஹான் மல்ஹோத்ரா தனது சதத்தை பதிவு செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 109 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் இந்திய யு19 அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் தடெண்டா சிமுகோரோ 3 விக்கெட்டுகளையும், பனாஷே மசாய், சிம்பராஷே முட்செங்கரேரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லீராய் சிவாவுலா அரைசதம் கடந்து அசத்தியதுடன், 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 62 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு அந்த அணியில் கியான் ப்ளிக்னாட் 37 ரன்களை சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.

இதன் காரணமாக ஜிம்பாப்வே யு19 அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் உதவ் மோகன் மற்றும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய யு19 அணியானது 204 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே யு19 அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் சதம் விளாசிய வியான் மல்ஹோத்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.