திருச்சியில் ரூ.8.37 லட்சம் மதிப்புடைய ரூ.200 கள்ள நோட்டுகள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ.8 லட்சத்து 37 ஆயிரத்து 800 மதிப்புடைய ரூ.200 கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்றிரவு மகாராஷ்டிர மாநிலத்தின் பதிவெண் கொண்ட கார் ஒன்று பெட்ரோல் நிரப்பியது. அதற்குரிய தொகையாக அவர்கள் கொடுத்த ரூ.200 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பதை அறிந்த பெட்ரோல் பங்க் ஊழியர் துவாக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
அதையடுத்து, துவாக்குடி போலீஸார் துரிதமாக செயல்பட்டு வெளி மாநில பதிவெண் கொண்ட க்விட் காரை காட்டூர் மஞ்சத்திடல் செக் போஸ்ட்டில் மடக்கிப் பிடித்தனர். காரை சோதனையிட்டபோது, 2 பைகளில் ரூ. 200 கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தது. அதையடுத்து 41 கட்டுகள், 89 நோட்டுகள் உட்பட ரூ.8,37,800 மதிப்புடைய கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண ராம் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ள நோட்டுகளை மாற்றியபடியே திருச்சி வழியாக செல்லும்போது பிடிபட்டது தெரியவந்துள்ளது.
மேலும், கள்ள நோட்டு விவகாரத்தின் பின்னணியில் உள்ள கும்பல் யார்? இதுவரை தமிழகத்தில் எவ்வளவு பணம் கள்ள நோட்டுகளாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.