இருமல் மருந்து விவகாரத்தில் நடந்தது என்ன? தமிழக அரசு விளக்கம்!

இருமல் மருந்து விவகாரத்தில் நடந்தது என்ன? தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. அக்கடிதத்தில் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து கோல்ட்ரிஃப் சிரப் குறித்த விவரம் பெறப்பட்டது.

தொடர்ந்து அன்று சுமார் 4.00 மணியளவில் துணை மருந்து கட்டுப்பாடு இயக்குநரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் (Senior Drugs Inspector) தலைமையிலான குழு, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அக்.1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது.

பின், குழு மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதிகள், 1945-இன் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) Batch No: SR-13 உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வின் முடிவில் அந்த சிரப்பில் டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol, DEG) என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் 48.6 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது. பின், ஸ்ரீசன் பார்மசியூட்டிகள், நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு (Stop Production Order) பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது.

ஆனால், அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை (criminal proceedings) எடுத்து அந்நிறுவன உரிமையாளர் தலைமறைவானதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக குற்ற குறிப்பாணை (show cause memo) மருந்து ஆய்வாளர் மூலம் அந்நிறுவனத்தின் வெளிபுறமும், உரிமையாளரின் வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் (CRIMINAL) நடவடிக்கை மேற்கொள்ள C-2 சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு (Special Investigation Team) நேற்று அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதன் (வயது 75) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்நிறுவனத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீதும் விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.