போலி மருத்துவர்கள் தொல்லை இனி இல்லை - மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

போலி மருத்துவர்கள் தொல்லை இனி இல்லை - மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் பதிவு செய்யாத அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் முறையான கல்வித் தகுதி இல்லாமல், போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. 0குறிப்பாக, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் போலி மருத்துவர்கள் பிடிப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இதனை தடுக்கும் நோக்கில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சந்தேகத்திற்கிடமாக இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலி மருத்துவர்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம் எனவும், பதிவு செய்யாத அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (Directorate of Medical and Rural Health Services) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் விடுத்துள்ள அறிவிப்பு:

  • தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், ஆய்வகங்கள், நோயறிதல் மையங்கள் (Clinics) ஆகியவை தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 1997ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைபடுத்துதல்) சட்டம் 1997ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆயுதப்படை நடத்தும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • போலி மருத்துவர்கள் தொடர்பாக tncea.dmrhs@gmail.com என்ற இணையதளத்திலும், 104 என்ற இலவச தொடர்பு எண் மூலமும் புகார் அளிக்கலாம்.
  • ஒருமுறை பதிவு பெற்ற மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
  • 5 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ளலாம்.
  • பதிவு செய்யாத மருத்துவமனைகள், நிறுவனங்கள் 2026 ஜூன் மாதத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும்.
  • இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவோ, சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.