''தீயணைப்பு துறை அலுவலகத்தில் அதிகாலையில் நடமாடிய மர்ம நபர்'' - துணை இயக்குநர் பரபரப்பு குற்றச்சாட்டு!

''தீயணைப்பு துறை அலுவலகத்தில் அதிகாலையில் நடமாடிய மர்ம நபர்'' - துணை இயக்குநர் பரபரப்பு குற்றச்சாட்டு!

திருநெல்வேலி, தீயணைப்பு துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் அதிகாலையில் மர்ம நபர் நடமாடிய சிசிடிவி காட்சி கிடைத்துள்ளதாக துணை இயக்குநர் சரவண பாபு பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை துறையின் மண்டல அலுவலகம் நெல்லை பெருமாள்புரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 18 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் துணை இயக்குநர் சரவணபாபு அறையில் இருந்து ரூ.2.61 லட்சம் பணமும், தீயணைப்பு படை வீரர் செந்தில் மேஜையில் இருந்து ரூ.41 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அதே 18 ஆம் தேதி நள்ளிரவு இந்த அலுவலகத்திற்கு மர்ம நபர் சென்று வந்த சிசிடிவி காட்சி நேற்று வெளியானது. எனவே தன்னை வேண்டும் என்றே லஞ்ச வழக்கில் சிக்க வைத்திருப்பதாக சரணவபாபு கூறியுள்ளார். மேலும் அந்த மர்ம நபர் குறித்து விசாரிக்கும்படி அவர் நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம் புகார் அளித்தார்.

இது குறித்து சரவணபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''எங்கள் அலுவலகத்தில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை மர்ம நபர் உள்ளே சென்று சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான சி.சி.டி.வி காட்சி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் காவல் ஆணையரிடம் புகாரளித்திருக்கிறேன். அவர்கள் குற்றவாளியை தேடி வருவதாக கூறினார்கள். இது, நிர்வாக அலுவலகம் என்பதால் இரவு பணி கிடையாது.

எனவே பணி விஷயமாக யாரும் வந்திருக்க வாய்ப்பு இல்லை. 10 மணிக்கு அலுவலகத்தை பூட்டி விட்டு சாவியை தீயணைப்பு நிலையத்தில் கொடுத்து விடுவோம். சாவி எங்கள் தீயணைப்பு நிலையத்தில் கொடுப்பதால் அலுவலகத்தில் இருந்தே யாரும் வந்து சென்றார்களா? என்பது எனக்கு தெரியவில்லை. அலுவலக ரீதியாக எனக்கு நிறைய பகைகள் இருக்கிறது. இருப்பினும் குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.

யார் வந்தார்கள் என்பதை போலீஸ் கண்டுபிடிப்பார்கள். திட்டமிட்டு என்னை சிக்க வைத்திருப்பதை போன்று தான் தெரிகிறது. துறைரீதியாக என்னால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம். நான் நல்லவனாக இருந்தாலும் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்க தான் செய்வார்கள். எனவே அவர்கள் திட்டமிட்டு என்னை மாட்ட வைத்திருக்கலாம். என்னைப் போன்று பிற அதிகாரிகள் இதேப் போல் பாதிக்க கூடாது என்பதற்காக தான் புகார் கொடுத்துள்ளேன். அதை அனுபவித்த எனக்கு தான் வலிகள் தெரியும்'' என்று கூறினார்.