தீபாவளி பண்டிகை: ஸ்வீட் ஸ்டால்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் விதித்துள்ள அதிரடி நிபந்தனைகள்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பலகாரப் பொருட்களை தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார்.
உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நாளில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரை சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி பலகாரங்களை தயாரிப்பாளர்களுக்கு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தீபாவளி திருநாளில் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உணவு வணிகர்கள் உறுதி செய்திட வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உணவுப் பொருள்கள் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு, நுகர்வோரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு தங்களின் தயாரிப்புகளை விநியோகம் செய்ய வேண்டும்.
அனைத்து வகையான உணவு வணிகர்களும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ், தங்களது வணிக நிறுவனத்தை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பலகாரப் பொருட்களை தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பொட்டலமிடாமல் கொள்கலன்கள் அல்லது தட்டில் வைத்து விற்பனை செய்யப்படும் இனிப்புகள் மற்றும் கார வகைகளில், உணவு வணிகர்கள் தயாரிப்பு தேதியினை குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. எனினும் “Best Before Date”-ஐ தாமாக முன்வந்து குறிப்பிடலாம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் Food Safety and Standards Authority of India) தெரிவித்துள்ளது.
உணவு பொருட்களை ஈக்கள் மொய்க்காத மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதாரமான சூழலில் தயாரித்து விற்பனை செய்திட வேண்டும்.அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை பலகாரத்தில் சேர்க்கக்கூடாது. மேலும், சில உணவுப் பொருட்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிறமிகளை, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தி மீதமாக உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது..
பலகாரங்களை பேக்கிங் செய்தாலும், கிப்ட் பாக்ஸாக தயாரித்தாலும், விபரச்சீட்டு இடும்போது தயாரிப்பாளர் முழு முகவரி, தயாரிப்பாளர் பெயர், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு மற்றும் உரிமம், பதிவு எண் உள்ளிட்ட லேபிள் விபரங்களை அவசியம் அச்சிடுதல் வேண்டும்.உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அனுமதியற்ற பிளாஸ்டிக்குகளை கொண்டு பலகாரங்களை பேக்கிங் செய்யவோ அல்லது பார்சல் செய்யவோ கூடாது.
உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற கடைகளில் மட்டும் நுகர்வோர் பலகாரங்களை வாங்க வேண்டும். விபரச்சீட்டு உள்ள பலகாரங்களை மட்டும் வாங்கி உபயோகிக்க வேண்டும்.உணவு பொருட்களை வாங்கும்போது அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் விபரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.
மேலும், பலகாரங்களின் தரம் குறைபாடு அல்லது சுகாதாரமற்ற கடைகள் குறித்து நுகர்வோர் புகார் தெரிவிக்க விரும்பினால், 04329-223576 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தின் எண் அல்லது 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ unavupukar@.gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.