WPL 2026: சதத்தை தவறவிட்ட ஸ்மிருதி மந்தனா
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஷஃபாலி வர்மா ஒருபக்கம் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய லிசெல் லீ, லாரா வோல்வார்ட், கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கேப், நிக்கி பிரசாத், மின்னு மணி, ஸ்நே ரானா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 62 ரன்களில் ஷஃபாலி வர்மாவும் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீராங்கனைகளில் லூசி ஹேமில்டன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் லாரன் பெல் மற்றும் சயாலி சட்கரே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் தொடக்க வீராங்கனை கிரேஸ் ஹேரிஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
ன்னர் இணைந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜார்ஜியா வோல் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியையும் உறுதி செய்தனர்.
இந்த போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 96 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் ஜார்ஜியா வோல் தனது அரைசத்ததைப் பதிவு செய்ததுடன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.