உலகக்கோப்பை தோல்விக்கு பின் ஓய்வை அறிவிக்க நினைத்தேன் - ரோஹித் சர்மா ஓபன் டாக்

உலகக்கோப்பை தோல்விக்கு பின் ஓய்வை அறிவிக்க நினைத்தேன் - ரோஹித் சர்மா ஓபன் டாக்

2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி தீவிரமாக யோசித்ததாக ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் சர்மா. இவர் மூன்று வடிவங்களிலும் இந்திய அணியை வழிநடத்தியதுடன், அதில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக இவரது தலைமையிலான இந்திய அணி 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை மற்றும் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

அதேசமயம் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும், இந்திய அணி அபாரமாக செயல்பட்ட நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற கையோடு அதிலிருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, இந்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

இதனையடுத்து எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் எண்ணத்துடன் அவர் தற்சமயம் செயல்பட்டு வருகிறார். மேலும் அவர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தனது ஃபார்மையும் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி தீவிரமாக யோசித்ததாக ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

குருகிராமில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் யூனியன் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியின் போது பேசிய ரோஹித் சர்மா, "2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். இந்த விளையாட்டு என்னடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதால், இனியும் இந்த விளையாட்டை விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன். மேலும் இந்த விளையாட்டிற்காக கொடுக்க என்னிடம் எதுவும் மிச்சமில்லை என்றும் தோன்றியது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஏனெனில் நாம் ஒரு விசயத்தில் அதிக கவனம் செலுத்திய நிலையிலும், அதில் நாம் விரும்பிய முடிவை அடையாதபோது அது மிகவும் ஏமாற்றத்தைக் கொடுக்கும். எனக்கும் சரியாக அப்படித்தான் நடந்தது. ஆனால், அதோடு வாழ்க்கை முடிந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும். ஏமாற்றத்தை எப்படிச் சமாளிப்பது, மனதை மீட்டமைத்து புதிதாகத் தொடங்குவது எப்படி என்பது எனக்கு ஒரு பெரிய பாடமாக அமைந்தது" என்று கூறினார்.

மேலும் பேசிய ரோஹித் சர்மா,"அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் என்ற மற்றொரு வாய்ப்பு வரவிருக்கிறது என்றும், நான் என் முழு கவனத்தையும் அதன் மீது திருப்ப வேண்டும் என்றும் எனக்குத் தெரியும். இப்போது இதைச் சொல்வது மிகவும் எளிது, ஆனால் அந்தத் தருணத்தில், அது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் விரும்பும் ஒன்று என் கண் முன்னே இருக்கிறது என்றும், அதனை விட்டுவிடக் கூடாது என்றும் நினைவூட்டிக்கொண்டு செயல்பட்டதுடன், என் வழியையும் மீட்டெடுத்தேன்" என்று கூறினார்.