இந்தியா ஓபன் தொடர் 2026: முதல் சுற்றில் வெளியேறிய சிந்து; ஸ்ரீகாந்த், பிரனாய் முன்னேற்றம்
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வியட்நாமின் நுயான் துய் லின்னை எதிர்கொண்டார். தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட பிவி சிந்து 22-20 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நுயான் இரண்டாவது செட்டை 21-12 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 21-15 என்ற கணக்கிலும் கைப்பற்றி சிந்துவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் நுயான் 20-22, 21-15, 21-12 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிவி சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் தருண் மன்னேபள்ளி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தருண் மன்னேபள்ளி 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி ஸ்ரீகாந்திற்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் கம்பேக் கொடுத்த ஸ்ரீகாந்த் இரண்டாவது செட்டை 21-6 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதன் காரணமாக போட்டியின் முடிவானது மூன்றாவது செட்டிற்கு நகர்ந்தது. இதனால் இருவரும் சரிக்கு சமமாக போட்டியிட்டனர். இறுதியில் மூன்றாம் செட்டிலும் அபாரமாக செயல்பட்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19 என்ற கணக்கில் செட்டை வென்றார். இதன் மூலம் கிடாம்பி ஸ்ரீகாந்த் 15-21, 21-6, 21-19 என்ற செட் கண்ணில் தருண் மன்னேபள்ளியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஹச்.எஸ்.பிரனாய் - லீ சியுக் யி-யை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட பிரனாய் 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்கில் லீ சியுக்கை வீழ்த்தி, இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.