ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் தேதி ஒருநாள் தொடரும், மார்ச் 6ஆம் தேதி டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். முன்னதாக இவர்கள் தலைமையிலான இந்திய மகளிர் அணி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சாதனையை படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் வைஷ்ணவி சர்மா, ஜி கமலினி மற்றும் காஷ்வி கௌதம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஷஃபாலி வர்மா, ரேணுகா சிங், கிராந்தி கவுட், ஸ்நே ரானா உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், உமா சேத்ரி, யஸ்திகா பாட்டியா மற்றும் பிரதிகா ராவல் உள்ளிட்டோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
டி20 அணியை பொறுத்தவரையில் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பெற முடியாமல் தடுமாறி வந்த ஸ்ரேயங்கா பாட்டில் மற்றும் பார்தி ஃபுல்மாலி ஆகியோர் மீண்டும் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் பார்தி ஃபுல்மாலி கடந்த 2019ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் ஹர்லீன் தியோல் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷஃபாலி வர்மா, ரேணுகா தாக்கூர், ஸ்ரீ சரணி, வைஷ்ணவி ஷர்மா, கிராந்தி கவுட், சினே ராணா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஜி கமலினி, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, ஸ்ரேயங்கா பாட்டீல்
இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷஃபாலி வர்மா, ரேணுகா தாக்கூர், ஸ்ரீ சரணி, வைஷ்ணவி ஷர்மா, கிராந்தி கவுட், சினே ராணா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஜி கமலினி, காஷ்வீ கௌதம், அமன்ஜோத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல்
டி20ஐ தொடர்
- முதல் போட்டி - பிப்ரவரி 15, சிட்னி
- இரண்டாவது போட்டி - பிப்ரவரி 19, கான்பெர்ரா
- மூன்றாவது ஆட்டம் - பிப்ரவரி 21 - அடிலெய்டு
ஒருநாள் தொடர்
- முதல் போட்டி - பிப்ரவரி 24, பிரிஸ்பேன்
- இரண்டாவது போட்டி - பிப்ரவரி 27, ஹோபார்ட்
- மூன்றாவது ஒருநாள் போட்டி - மார்ச் 1, ஹோபார்ட்