ருதுராஜ் கெய்க்வாட் பிளேயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பில்லை - விளக்கும் ஆகாஷ் சோப்ரா!
ருதுராஜ் கெய்க்வார்ட் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கௌகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் இடம் பிடித்துள்ளார். இதுதவிர காயம் காரணமாக விலகி இருக்கும் ஷுப்மன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அறிமுக வீரர் துருவ் ஜூரெல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இதனால் இருவரில் யார் ரோஹித்துடன் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, "ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதுடன், அதிக ரன்கள் எடுத்ததால் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் முன்னதாக அபிஷேக் சர்மா அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்சமயம் ருதுராஜுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இருப்பினும் ருதுராஜ் கெய்க்வார்ட் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலில் தனது வாய்ப்பை பெறுவது அவசியமாகும். அவர் கடந்தாண்டு முதலே ஒருநாள் அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதனால் ரோஹித்துடன் ஜெய்ஸ்வால் தான் தொடக்க வீரராக விளையாடுவார் என நினைக்கிறேன்"என்று கூறியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்காக 2022ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 6 போட்டிகளில் ஒரு அரைசதம் உள்பட 115 ரன்களை எடுத்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2025ஆம் ஆண்டு ஒருநாள் அணியில் அறிமுகமான நிலையில் அதில் 15 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் யார் தொடக்க வீரர் இடத்தை பிடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.