பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்...யார் இவர்?

பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்...யார் இவர்?

பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜவின் செயல் தலைவராக பதவி வகித்து வந்த ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து தற்போது புதிய செயல் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைவராக இருந்த அமித் ஷா 2019ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்ற பின், ஜே.பி நட்டா அக்கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றார். மக்களவை தேர்தல் உள்ளிட்ட பல காரணங்களால் நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாஜவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ளார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பாஜக நாடாளுமன்ற வாரியம் அங்கீகரித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமைக்கு நம்பிக்கைக்குரியவராகவும், கட்சியின் ஒழுங்கு குழு தலைவராகவும் செயல்பட்டு வந்த நிதின் நபின், தேசிய தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நிதின் நபினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், கடின உழைப்பாளியும் காரியகர்த்தாவுமான நிதின் நபின், கட்சியில் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்றும், பீகாரில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பலமுறை பணியாற்றி உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருடைய பணிவான இயல்பு மற்றும் அர்ப்பணிப்பால் வருங்காலங்களில் கட்சியை வலுப்படுத்துவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த நிதின் நபின்?

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நபி கிஷோர் சின்ஹாவின் மகன் நிதின் நபின் (வயது 45). தந்தையின் மறைவுக்கு பின், பாஜகவில் தீவிரமாக செயல்பட்ட இவர், நீண்ட காலமாக அக்கட்சிக்காக பணியாற்றி வருகிறார். குறிப்பாக, பீகாரில் பாஜக கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியப்பங்கு வகித்துள்ளார்.

சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 2006ஆம் ஆண்டிலிருந்து நேரடி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாட்னா மேற்கு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிபெற்று 5 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக உள்ளார்.