லாட்டரியில் ரூ.1 கோடி விழுந்தவர் கடத்தல்.. கேரளாவில் பரபரப்பு
கேரளாவில் லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த நபர் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரவூரை சேர்ந்தவர் சாதிக்(46). இவருக்கு கடந்த மாதம் 30ம் தேதி லாட்டரியில் 1 கோடி ரூபாய் விழுந்ததாக சொல்லப்படுகிறது. தனக்கு விழுந்த லாட்டரி தொகை கிடைக்க தாமதம் ஆகும் என கூறப்பட்டதால் அதை அதிக விலைக்கு சாதிக் விற்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாதிக்கிடம் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வாங்க சிலர் முயன்றுள்ளனர். இதற்காக சாதிக்கை பரவூர் வரசொல்லி கூறியுள்ளனர். அதிக விலைக்கு லாட்டரியை விற்க நினைத்த சாதிக் தனது நண்பருடன் பரவூர் சென்றதாகவும், ஒரு கும்பல் சாதிக்கை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதன்பின்னரே சாதிக் கடத்தப்பட்டது அவரது நண்பருக்கு தெரிய வந்துள்ளது. இரவு 11 மணியளவில் சாதிக்கிடம் இருந்து லாட்டரி சீட்டை வாங்கிய அந்த கும்பல் அவரை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர்.
பின்னர் போலீசிடம் வந்த சாதிக், லாட்டரி டிக்கெட் பறிப்பதற்காக தன்னை ஒரு கும்பல் கடத்தியதாக புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழும் லாட்டரியை வைத்திருக்கும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.