நீதிபதிகள் வரம்பு மீறி பேசத் தொடங்கி இருக்கிறார்கள்; சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு

நீதிபதிகள் வரம்பு மீறி பேசத் தொடங்கி இருக்கிறார்கள்; சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு

 நீதிபதிகள் வரம்பு மீறி பேசத் தொடங்கி இருக்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலம் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை என்ற பெயரில் பொதுமக்களை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்காக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொது மக்களை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், கரூர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாநகர மாவட்ட செயலாளர் தண்டபாணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் வாழ்வுரிமைக்காக, வாழ்வாதாரத்திற்காக என்றும் துணை நிற்கும் என்று பொதுமக்களுக்கு உறுதியாளித்தனர்.

இதன் பின்னர், மாநில செயலாளர் பி. சண்முகம் கரூர் சுங்ககேட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''பல்வேறு விதமான தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சியிலே பிஜேபி அரசு ஈடுபட்டு இருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் மத்திய அமைச்சரவை கூடி பல்வேறு மசோதாக்களுக்கான கோப்புகளை வழங்கி இருக்கிறார்கள்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' என்கிற பெயரை மாற்றிவிட்டு 'பூஜ்ஜிய பாபு' என்ற பெயரை மாற்றுகிறார்கள். 'வேலை உத்தரவாதம்' என்பதை மாற்றி 'வேலைவாய்ப்பு' என்று மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.

ஏற்கனவே இருக்கக்கூடிய சட்டப்படி குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பதை மாற்றி, அரசு அதிகாரிகள் நினைத்தால் தான் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்கிற ஒரு சாய்ஸ் வந்து, அதிகாரிகளிடம் இருக்கிறது. இத்திட்டத்தை மாற்றி அமைப்பது கோடிக்கணக்கான மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். பொதுமக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை பட்டவர்த்தனமாக செயல்படுவதை போல தெரிகிறது.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விதைகள் சட்டம் 2025 என்று புதிதாக ஒரு சட்டத்தை பாஜக ஒன்றிய அரசு கொண்டுவர உள்ளது. மின்சார சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. காப்பீட்டு திட்டத்தில் நூறு சதவீதம் அந்நிய முதலீட்டை கொண்டு வருவது உள்ளிட்ட மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

அணுசக்தி திட்டத்தில் அந்நிய கம்பெனிகளை அனுமதிப்பது என்று தீர்மானித்து இருக்கிறார்கள். இது எல்லாமே நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிற பிரச்சினை என்றாலும், பீகாரிலே பாஜவுக்கு கிடைத்த அபரீதமான வெற்றி எதிர்பாராத வெற்றி. இதனால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிற நிலையில்தான் பிஜேபி அரசாங்கம் உள்ளது.

இந்த மாதிரியான மக்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்ற பாஜக அரசு தீர்மானித்திருக்கிறது. ஆகவே பெரும்பான்மை மக்களுடைய நலன்களை பாதுகாக்க கூடிய வகையில் அனைத்து எதிர்கட்சிகளும் பிஜேபி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.

குறிப்பாக மின்சார சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்கனவே தமிழ்நாட்டில் விவசாயிகள் அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய விவசாயத்துக்கு இலவச மின்சாரம் எல்லாமே இல்லாமல் போய் மின்சார கட்டமைப்புக்குள் தனியார் என்பது அனுமதிக்கப்பட்டு ஆண்டுதோறும் கட்டணத்தை ஏற்றுவதற்கான வாய்ப்பு சட்ட திருத்தத்தில் இருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலம் தொடர்பாக அங்கு வசிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ராதாகிருஷ்ணன் என்ற தனிநபர் நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு முன்னர் கோயில் நிர்வாகத்திற்கு மாநில அரசு பணம் செலுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தான் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்கிற நபர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் விளைவாக இன்றைக்கு இடியாப்பம் சிக்கலை மக்களும், அரசாங்கமும் எதிர்கொண்டிருக்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து இருக்கிறார்களே தவிர அவர்கள் நீதி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறேன். மக்கள் தரப்பு கருத்து என்ன என்று கேட்காமல் தன்னிச்சையாக நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது ஏற்பட்டதல்ல. இது இயற்கை நீதிக்கு புறம்பானது. இந்த அடிப்படையான விஷயத்தை நீதிபதிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தீர்ப்பளித்து விட்டோம். நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் உத்தரவிட்டுவிட்டோம். இல்லையென்றால் மத்திய படையை நாங்கள் பயன்படுத்தட்டுமா? என்கிற அளவுக்கு பகிரங்கமாக நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.

அப்படிப்பட்ட அதிகாரம் எதையும் சட்டம் நீதிபதிகளுக்கு வழங்கவில்லை. நீதிபதிகள் சமீபகாலமாக இத்தகைய உத்தரவு பிறப்பிப்பதை ஒரு பேஷனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கரூர் வெண்ணமலை கோயில் விவகாரத்தில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு ஆழமாக வலியுறுத்தும் வழியில் நீதிமன்றம் மூலம் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். எதிர் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி, வீடுகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும் பறிக்கக்கூடிய சட்டங்கள் இந்தியாவில் இல்லை. இத்தகைய தீர்ப்புகளை வழங்கக்கூடிய நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு பிறப்பித்த நீதிபதி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, பாராளுமன்ற சபாநாயகரிடம் வழங்கி இருக்கிறார்கள். நீதிபதிகள் குறிப்பிட்ட மதத்திற்கு சாதகமாக செயல்படுவது அவர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.

நீதிபதிகள் வரம்பு மீறி பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் மாநில அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் மோதல் போக்கை உண்டாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனை தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலங்களில் நீதிபதிகளே உருவாக்குவது என்பது கண்டனத்துக்குரியது.

எஸ்ஐஆருக்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் நடத்தி வருகின்றன. தகுதி படைத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும் வழக்கு தொடுத்துள்ளது. தொடர்ந்து வழக்கினை நடத்துவோம். இன்று எஸ்ஐஆர் படிவம் வழங்க இறுதி நாள் என்றாலும் கூட, விடுபட்ட வாக்காளர்கள் பட்டியல் கிடைத்தால் அவர்களையும் மீண்டும் வாக்காளர் பட்டியில் இணைப்பதற்கான களப்பணியை செய்வோம்'' என்றார்.