திராவிட வெற்றிக் கழகம் உதயம்! தவெக-வுடன் மல்லுக் கட்டுகிறாரா மல்லை சத்யா?

திராவிட வெற்றிக் கழகம் உதயம்! தவெக-வுடன் மல்லுக் கட்டுகிறாரா மல்லை சத்யா?

 ‘திராவிட வெற்றிக் கழகம்’ எனும் தனது கட்சியின் புதிய பெயரை மல்லை சத்யா அறிவித்துள்ளார்.

வைகோ தொடங்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர் மல்லை சத்யா. அந்த கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மல்லை சத்யாவும், அவரது ஆதரவாளர்களும் இணைந்து புதிய கட்சியைத் தொடங்கும் பணிகளில் இறங்கினர். அதன் தொடச்சியாக கடந்த மாதம் கட்சியின் கொடியை மல்லை சத்யா அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், இன்று புதிய கட்சி தொடக்க விழா சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெற்றது.

புதிய கட்சியின் பெயரை திருப்பூர் துரைசாமி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்து வைத்திருந்தனர்.‌ சரியாக 12 மணியளவில் மல்லை சத்யா முன்னிலையில், ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது.

கட்சியின் பெயர் அறிவிப்புக்கு முன்னதாக பேசிய மல்லை சத்யா, துரை வைகோ மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். “அரசியல் படுத்தப்படாத, ஜனநாயகப்படுத்தப்படாத, வலதுசாரி கார்ப்பரேட் சிந்தனை கொண்ட துரை வைகோ, என்னை ஒரு துரோகப் பழியை சுமத்தி, இயக்கத்தில் இருந்து தூக்கி எறிந்தார்” என்று அவர் தெரிவித்தார்.

இதனால், பல இரவுகள் தூக்கமில்லாமல் அவதிப்பட்ட தனக்கு சில நண்பர்கள் ஆதரவளித்து ஆசுவாசப்படுத்தினர் என்று கூறிய மல்லை சத்யா, “புதிய நிர்வாகிகள் நியமனத்தின் போது எனக்கும், வைகோவிற்கும் இடையே தர்க்கம் நடந்தது. அப்போது, ‘நீங்கள் கொடுக்க அனைத்து பணிகளும் நான் செய்திருக்கிறேன். என் மீது இப்படி ஒரு அபாண்டமான பழியை சுமத்துவது சரியா? நான் குற்றமற்றவன் என்பது உங்களுக்கு தெரியும். நான் உங்களுக்கு மிகுந்த விசுவாசத்தோடு இருந்தேன் என்பது உங்களுக்கு தெரியும்’ ஆனால், துரோகி எனும் ஒரு கொடும் பழியை என் மீது சுமத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?” என்று வைகோவிடம் கேட்டதாகக் கூறினார்.

அந்த ‘துரோகி’ எனும் ஒற்றைச்சொல் தான் இன்று தலைநகர் சென்னையில் கட்சியாக எழுச்சிப் பெற்றிருக்கிறது என்று மல்லை சத்யா தெரிவித்தார்.

மேலும், நாஞ்சில் சம்பத் அவ்வப்போது மேடையில் “கண்ணீர் எவ்வாறான வலிமையை தரும்” என பேசுவதை சுட்டிக் காட்டிய அவர், அதை தான் தற்போது உணர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யாயாவும், இணை ஒருங்கிணைப்பாளர் கராத்தே பழனிச்சாமியும், முதன்மை செயலாளராக வல்லம் பஷீரும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக வழக்கறிஞர் ஆனந்தராஜ், அரசு, பிரபாகரன், க.பாண்டியராஜன், பெரியார் தாசன் ஆகியோர் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.