செங்கோட்டையன் நீக்கம் நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போன்றது - சசிகலா காட்டம்!

செங்கோட்டையன் நீக்கம் நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போன்றது - சசிகலா காட்டம்!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டிருப்பது நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவது போன்றது என்று சசிகலா காட்டமாக கூறியுள்ளார். மேலும் இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர்.

அப்போது 3 பேரும் ஒன்றாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு வருகை தந்திருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்தனர். இவ்விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சசிகலா தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ''செங்கோட்டையனை நீக்கியிருப்பதாக வருகின்ற செய்திகள் வேதனையளிக்கிறது. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்க முடிகின்றது. யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது.

செங்கோட்டையன் போன்றோர் புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசை தான் நிறைவேறியிருப்பதாக தெரிகின்றது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில், நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இதுபோன்ற செயல்கள் “நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது” போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கே கேடாக அமைந்து விடும். இது போன்ற மனப்பாங்கை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கழகத்தொண்டர்களால் திருத்தப்படுவது நிச்சயம்.'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.