பனியால் சருமம் வறண்டு போகிறதா? தினமும் இந்த டீடாக்ஸ் டிரிங் குடிங்க!

பனியால் சருமம் வறண்டு போகிறதா? தினமும் இந்த டீடாக்ஸ் டிரிங் குடிங்க!

குளிர்காலத்தில் குளிர் காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக நமது தோல் தனது இயற்கையான பொலிவையும் ஈரப்பதத்தையும் இழக்கிறது. இதனால் தோல் வறண்டு, மந்தமாக தோன்றும். சரும ஆரோக்கியத்திற்கு வெளிப்புற பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நமது உடலின் உள்ளே இருந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் அவசியம்.

இதயம், குடல் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்போது, அதன் பிரதிபலிப்பு பளபளப்பான சருமமாக வெளிப்படும். அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் சில ‘டீடாக்ஸ்’ பானங்கள் உடலின் நச்சுக்களை நீக்கி, குளிர்காலத்தில் சருமம் பொலிவுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது. அந்த வகையில், வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய 5 பானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த நீர்: எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்கிறது மற்றும் ஆரோக்கியமான தோல் செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது துளைகளை அடைக்கும் எண்ணெய் தேக்கத்தை நீக்கி, முகப்பரு வராமல் தடுக்கிறது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

கற்றாழை சாறு: கற்றாழை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. இதில் வைட்டமின்கள் E, C, மற்றும் B, கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இது சருமத்தை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. மேலும் இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி, சருமத்தின் மீளும்தன்மையை அதிகரித்து, சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. கற்றாழை ஜெல்லை நேரடியாகக் குடிப்பது சற்றுக் கடினமானதாக இருக்கலாம். அதனால், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2-3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லைக் கலந்து குடிக்கலாம்.

மஞ்சள் மற்றும் இஞ்சி நீர்: மஞ்சள் மற்றும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு கலவைகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. இவை செல் வளர்ச்சியை ஊக்குவித்து, வயதானதின் அறிகுறிகளையும், கரும்புள்ளிகளையும் குறைக்க உதவுகின்றன. இது குடலின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது, மேலும் சருமப் பொலிவுக்கு உதவும். ஒரு கப் வெந்நீரில் அரை டீஸ்பூன் துருவிய இஞ்சி மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

சியா விதைகள் மற்றும் நீர்: சியா விதைகளில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை மேம்படுத்துகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் தோலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், புற ஊதா கதிர்வீச்சு சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி சியா விதைகளைச் சேர்த்து, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ்: பீட்ரூட் மற்றும் கேரட் பீட்டா-கரோட்டின் (Beta-carotene) மற்றும் வைட்டமின் C போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கல்லீரலை நச்சு நீக்கம் செய்கிறது. இதன் விளைவாக சருமத்தில் உள்ள நிறமாற்றம் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகள் குறைந்து, ஆரோக்கியமான இயற்கையான பொலிவை அளிக்கிறது. பீட்ரூட் மற்றும் கேரட்டை எடுத்து சாறாக்கி, ஒரு சிட்டிகை இஞ்சியும் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.