‘கொலை செய்யப்பட்டதால் எங்கள் காதல் அழியாது’ - உயிரிழந்த காதலன் உடலுடன் திருமணம் செய்து கொண்ட காதலி சபதம்
மகாராஷ்டிராவின் நாந்தேட் நகரத்தைச் சேர்ந்த ஆஞ்சலுக்கு அவரது சகோதரர் மூலமாக பழக்கமானவர் 20 வயதான சாக்சம் டாடே. ஆஞ்சல் வீட்டுக்கு டாடே அடிக்கடி வந்துபோனதால் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த அந்த ஜோடி வெவ்வெறு சமூகம் என்பதால் இருவீட்டாரும் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர். பல மிரட்டல்கள் வந்தபோதும் அவர்கள் காதலை கைவிடவில்லை.
இதனிடையே டாடேவை திருமணம் செய்ய ஆஞ்சல் முடிவு செய்தார். இதனை அறிந்து கொண்ட ஆஞ்சலின் சகோதரர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் சேர்ந்து காதலன் டாடேவை கடந்த வியாழக்கிழமை கடத்தி சென்று அடித்து உதைத்ததுடன் துப்பாக்கியால் சுட்டு அவரது தலையை கற்களைக் கொண்டு சிதைத்தனர்.
இதனை அறிந்த ஆஞ்சல் ஆவேசமாக வீட்டை விட்டு வெளியேறி டாடேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். தனது காதலனின் சடலத்துக்கு முன்பாகவே உடம்பில் மஞ்சள் தேய்த்து, நெற்றியில் குங்குமம் வைத்து அவரை திருமணம் செய்துகொண்டார். எஞ்சிய வாழ்க்கையை டாடேவின் வீட்டில் இறுதிவரை அவரது மனைவியாக வாழ்வேன். அவரது குடும்பத்தில் மருமகளாக இருப்பேன் என்று ஆஞ்சல் சபதமெடுத்தார்.
இதுகுறித்து ஆஞ்சல் கூறுகையில், “டாடே இறந்தாலும் எங்கள் காதல் சாகவில்லை. கடைசியில் எங்கள் காதல்தான் வெற்றிபெற்றது. எங்களை பிரிக்க நினைத்த எனது தந்தையும், சகோதரரும் தோற்றுப்போய்விட்டனர். டாடேவை கொன்ற அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்றார்.