“துண்டை மாற்றியதால் கொள்கையும் மாறிப்போச்சு” - செங்கோட்டையன் மீது பழனிசாமி பாய்ச்சல்
செங்கோட்டையன் தனது துண்டை மாற்றி விட்டதால் அவரது கொள்கையும் மாறிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் திருமால் நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: வரும் தேர்தலில் கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். அதனை உறுதி செய்துள்ளது இங்கு கூடியுள்ள கூட்டம். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெறும். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர், ஓட்டு வாங்கும்போது உங்களை அணுகினார். ராஜினாமா செய்ய உங்களை சந்தித்தாரா?
கடந்த 26, 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இங்கு வந்தார். எந்த திட்டத்தை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சி காலத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வந்தோம். கோபியில் உள்ள ஒருவர் (முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்) அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை எனக் கூறி விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் இப்போது யார் படத்தை வைத்து மாற்று கட்சியில் சேர்ந்தீர்கள். கோபியில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் ஜெயலலிதா படம், எம்ஜிஆர் படமும் இல்லை. அதில் கருணாநிதி, ஸ்டாலின் படம் இருந்தது. அப்போதே அவர் ‘பி’ டீம் வேலையை ஆரம்பித்துவிட்டார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் கோபியில் மனம் திறந்து பேட்டி கொடுத்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை சந்தித்தார். அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவரை மதித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 10 நாளில் கட்சி ஒருங்கிணைப்பை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் நானே முன்னின்று நடவடிக்கை எடுப்பேன் என தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்தார். தலைமைக்கு எதிராக பேட்டி கொடுத்ததால் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்தோம்.
அதன்பின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் விழாவில் பங்கேற்றபோது பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரோடு சென்றார். அதனால் அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டு காலமாக இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டவர் அவர். கட்சிக்கு துரோகம் விளைவித்தார். அதனால் அவர் நீக்கப்பட்டார். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று கோபியில் வெற்றி விழா கொண்டாடப்படும்.
தற்போது அவர் மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளார். எங்கிருந்தாலும் வாழ்க. தூய்மையான ஆட்சி கொடுப்போம் என சொல்கிறார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தீர்கள். அப்போது தூய்மையான ஆட்சி கொடுக்கவில்லையா. துண்டை மாற்றியதால் அவரது கொள்கையும் மாறிப்போச்சு. எந்த கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.