அரசியலில் விலகி ஓய்வெடுக்க புது வீட்டில் குடியேறினார் லாலு
ராஷ்ட்ரிய ஜனாதா தள கட்சியின் தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ், புது வீட்டில் குடியேறியுள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வீடு எப்போதும் பரபரப்பாக இருக்கும். அரசியல் கட்சியினர், தொண்டர்கள், கிராமத்தினர், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் அங்கு வந்து செல்வர். அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளும் வீட்டு வளாகத்தில் வலம் வரும்.
லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை சமீபகாலமாக ஆரோக்கியமாக இல்லாததால், அவர் பொது இடங்களுக்கு செல்வதில்லை. இந்நிலையில் பிஹாரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதற்கு தனது சகோதரி ரோகினி மீது குற்றம் சுமத்தி சண்டையிட்டார் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ். இதனால் அவர் பாட்னாவி்ல் உள்ள பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் புது வீட்டில் குடியேறியுள்ளார். அங்கு மற்றவர்கள் எளிதில் செல்ல முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாலு பிரசாத் யாதவின் ஆரோக்கியத்தில் மட்டுமே அங்கு தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இது வெறும் வீடு மாற்றம் மட்டும் அல்ல, பிஹார் அரசியலில் நடைபெற்றுள்ள முக்கியமான மாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இனி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சம்பந்தமான முடிவுகள் அனைத்தையும் தேஜஸ்வி யாதவ் மட்டுமே எடுப்பார் எனத் தெரிகிறது.