2025-ல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 வீரர்கள்: நியூசிலாந்து வீரருக்கு முதலிடம்

2025-ல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 வீரர்கள்: நியூசிலாந்து வீரருக்கு முதலிடம்

2025 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வடிவங்களிலும் சேர்த்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி முதலிடம் பிடித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதவாவது ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி தான். இவர் இந்த ஆண்டில் 36 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் அதில் 3 முறை ஐந்து விக்கெட் ஹாலுடன் மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் பெரும்பான விக்கெட்டுகளை அவர் டி20 கிரிக்கெட்டில் வீழ்த்தி இருந்தாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தவிர, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் ஜேக்கப் டஃபி பெற்றுள்ளார். இதற்கு முன் சர் ரிச்சர்ட் ஹார்ட்லி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ஜேக்கப் டஃபி 81 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

பட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் வீரர் ஜிம்பாப்வே அணியின் பிளெசிங் முசரபானி. இவர் 31 போட்டிகளில் 34 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 முறை ஐந்து விக்கெட் ஹாலுடன் சேர்த்து 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவருடை பந்துவீச்சு எகானமியானது 4.5 ஆகும்.

பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கும் வீரர் நியூசிலாந்தின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி. இவர் 2025ஆம் ஆண்டி விளையாடிய 29 இன்னிங்ஸ்களில் 3 ஐந்து விக்கெட் ஹாலுடன் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2025 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ள வீரர் உங்களை சற்று ஆச்சரியப்படுத்தலாம். அந்த வீரர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த அலி தாவூத். இவர் 2025 ஆம் ஆண்டில் விளையாடிய 37 போட்டிகளில் ஒரு ஐந்து விக்கெட் ஹாலுடன் சேர்த்து மொத்தமாக 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டாப் 5 வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் குல்தீப் யாதவ் தான். அவர் வெறும் 25 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், ஒரு ஐந்து விக்கெட் ஹாலுடன் சேர்த்து மொத்தமாக 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று வடிவங்களிலும் தலா 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.