சதமடித்தார் கேஎல் ராகுல்; முதல் டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. இந்திய வீரர் கேஎல் ராகுல் சதமடித்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிஆமதாபாத் மைதானத்தில் நேற்று (அக்.,2) தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். சாய் ஹோப் (26), கேப்டன் சேஸ் (24), க்ரீவ்ஸ் (32) ஆகியோர் மட்டுமே சிறிதுநேரம் தாக்கு பிடித்தனர். சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் சரிந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்னுக்கு ஆல்அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கும், சாய் சுதர்சன் 7 ரன்னுக்கும் அவுட்டாகினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து விளையாடி வருகிறது. கேஎல் ராகுல் (53), கேப்டன் சுப்மன் கில் (18) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் கேப்டன் கில் அரைசதம் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் சதம் அடித்தார். அவருடன் துருவ் ஜூரேல் விளையாடி வருகிறார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.