ஆஷஸ் 2025-26: தொடரிலிருந்து விலகிய அட்கின்சன்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து

ஆஷஸ் 2025-26: தொடரிலிருந்து விலகிய அட்கின்சன்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன், நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் முதல் வெற்றியை பதிவு செய்தது. இது தவிர்த்து 15 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய முதல் வெற்றியையும் பதிவு செய்தது.

இதனையடுத்து ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்ற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் 18 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள இங்கிலாந்தும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் காயம் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முன்னதாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது கஸ் அட்கின்சன் காயத்தைச் சந்தித்திருந்தார். தற்சமயம் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய சில காலம் தேவைப்படும் என்பதால், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது தற்சமயம் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பாதியிலேயே வெளியேறி இருந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில் தற்சமயம் கஸ் அட்கின்சனும் தொடரில் இருந்து வெளியாறியுள்ளது அணியின் பந்துவீச்சு துறையை பலவீனப்படுத்தியுள்ளது.