உலக கோப்பை தொடருக்கு இந்தியா முழுமையாக தயாராகவில்லை! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்பீர்

உலக கோப்பை தொடருக்கு இந்தியா முழுமையாக தயாராகவில்லை! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்பீர்

டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியது. இதனையடுத்து இந்திய அணியானது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30 ஆம் தேதியும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, தங்களின் பயிற்சிகளைத் தொடங்கி வருகின்றன.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மீது ரசிகர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது. ஏனெனில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஒத்திகையாக தென்னாப்பிரிக்க தொடர் அமைந்துள்ளது. இதனால் இத்தொடரிலும் இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும், அணி வீரர்கள் தங்கள் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.